பட்டியலின சமையலர் : கனிமொழி ஆய்வு – முடிவுக்கு வந்த பிரச்சினை!

Published On:

| By Monisha

பட்டியலினத்தை சேர்ந்த பெண் உணவு சமைப்பதால் காலை உணவை புறக்கணித்து வந்த பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து கனிமொழி எம்.பி இன்று (செப்டம்பர் 12) உணவு சாப்பிட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் உசிலம்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 11 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்ட போது இந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த பள்ளியில் காலை உணவை சமைப்பதற்காக மகளிர் சுய உதவி குழு மூலம் அதே கிராமத்தை சேர்ந்த முனியசெல்வி  நியமிக்கப்பட்டார். இவர் தினமும் குழந்தைகளுக்கு காலை உணவை சமைத்து வருகிறார்.

ஆனால் பட்டியலினத்தை சேர்ந்த பெண் என்பதால் குழந்தைகளை பள்ளியில் காலை உணவை சாப்பிட வேண்டாம் என்று பெற்றோர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதனால் குழந்தைகள் பள்ளியில் காலை உணவை சாப்பிடாமல் புறக்கணித்தனர். இதனால் உணவும் வீணானது.

இதுகுறித்து சமையலர் முனியசெல்வி பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கூறியுள்ளார். தலைமை ஆசிரியர் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து நேற்று காலை கோட்டாட்சியர் ஜேன் கிறிஷ்டி பாய், வட்டாட்சியர் மல்லிகா, காவல் ஆய்வாளர் ஜின்னா பீர்முகமது, உதவி தொடக்க கல்வி அலுவலர் முத்தம்மாள் மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது பள்ளி மாணவர்களுக்கு காலை உணவாக வெண் பொங்கல் பரிமாறப்பட்டது. உணவை சாப்பிட சொல்லி மாணவர்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் பெற்றோரின் வற்புறுத்தலால் குழந்தைகள் உணவை சாப்பிடாமல் அழுது கொண்டே இருந்தனர்.

தொடர்ந்து அமைச்சர் கீதா ஜீவன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் நேரில் வந்து பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காலை உணவுத் திட்ட சமையலரை இடமாற்றம் செய்ய வேண்டும் என பெற்றோர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படும் அரசு திட்டங்களில் தனிநபர் விருப்பு வெறுப்புகளை திணிக்கக் கூடாது. அவர்களுக்கு அரசுத் திட்டம் முழுமையாக சென்றடைய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அமைச்சர் கீதா ஜீவன் அறிவுறுத்தினார்.

இதனையடுத்து குழந்தைகள் நாளை (இன்று) முதல் பள்ளியில் காலை உணவை சாப்பிடுவார்கள் என்று பெற்றோர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிலையில் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு இன்று காலை கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்றனர்.

Image

 

பள்ளியில் குழந்தைகளுடன் கனிமொழி எம்.பி., படிப்பு, காலை உணவு உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, குழந்தைகளுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார். பின்னர் ஊர் கமிட்டி தலைவர் முத்துவேல்சாமி மற்றும் கிராம மக்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.

அப்போது ”எங்கள் கிராமத்தில் தீண்டாமை என்ற சொல்லுக்கே இடமில்லை. இங்கு அனைத்து சமுதாயத்தினரும் ஒற்றுமையுடன் தான் உள்ளோம். எங்களுக்குள் எந்தவித பாகுபாடும் கிடையாது. இங்கு நடந்தது தனிப்பட்ட ஒருவரின் பிரச்சனை தான். இதில் சாதி பிரச்சனை எதுவும் இல்லை” என்றனர் மக்கள்.

இதனை கேட்ட கனிமொழி எம்பி, “உசிலம்பட்டி கிராமத்தில் தேவையான அனைத்து வசதிகளும் விரைவில் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். காலை உணவு திட்டம் என்பது மகத்தான ஒரு திட்டம். இது குழந்தைகள் நலன் சம்பந்தப்பட்டது. எனவே குழந்தைகளுக்கு கிடைக்க கூடிய உணவை யாரும் தடுக்க வேண்டாம்” என கேட்டுக் கொண்டார்.

மோனிஷா

பொன்முடி வழக்கு : ஜெயக்குமார் ஆஜராக உத்தரவு!

‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’: டீசர் எப்படி?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.