காஞ்சிபுரத்தில் இன்று (டிசம்பர் 27) போலீசார் நடத்திய என்கவுன்டரில் ரவுடிகள் இருவர் உயிரிழந்தனர்.
சென்னை பல்லவர்மேடு பகுதியை சேர்ந்தவர் பிரபா. இவர் மீது கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை, திருட்டு உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில், தேமுதிக நிர்வாகி சரவணன் கொலை வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பிரபா ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த வழக்கில் காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்திற்கு நேற்று (டிசம்பர் 26) ஆஜராக வந்த பிரபாவை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்தது.
இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்தநிலையில், காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே காவல்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் வந்த இருவர் போலீசாரை நோக்கி கையெறி குண்டுகளை வீசியுள்ளனர்.
உடனடியாக போலீசார் தற்காப்பிற்காக இருவர் மீதும் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் காரில் இருந்த ரகு என்கிற ரகுவரன், அவரது கூட்டாளியான கருப்பு பாட்ஷா என்கிற ஹசைன் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
காவல்துறை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ரகு, ஹசைன் ஆகிய இருவரும் பிரபா கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், பிரபாவால் கொலை செய்யப்பட்ட தேமுதிக நிர்வாகி சரவணனின் அண்ணன் தான் ரகு என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
ரவுடிகள் தாக்குதலில் காயமடைந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராமலிங்கம், காவலர் சசிகுமார் இருவரும் காஞ்சிபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எண்ணூர் ஆலையில் அமோனியா கசிவு: பொதுமக்கள் மருத்துவமனையில் அனுமதி!
சென்னையில் நாளை வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா: கேரள முதல்வர் பங்கேற்கிறார்!