நாட்டிலேயே மிகப்பெரிய புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தை காஞ்சிபுரத்தில் அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்கான ரூ.16.80 கோடி மதிப்பிலான பல்வேறு அதிநவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் புதிய மருத்துவக் கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,
“வரலாற்றுச் சிறப்பு மிக்க காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணாவின் பெயரால் முன்னாள் முதல்வர் கலைஞரால் கடந்த 1969ஆம் ஆண்டு அரசு புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் மருத்துவமனை தொடங்கப்பட்டது.
தற்போது இந்த மருத்துவமனை 280 படுக்கைகள் கொண்ட பெரிய மருத்துவமனையாக ரூ.220 கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணிகளும் பொதுப்பணித்துறையால் நடந்து வருகிறது.
புற்றுநோய் பாதிப்புகள் அதிகமாகிக் கொண்டே இருப்பதால் இப்புதிய மருத்துவமனையை மூன்று மாதங்களில் திறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நாட்டிலேயே மும்பையில் டாட்டா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் மிகப்பெரிய ஆராய்ச்சி மையமாக செயல்பட்டு வருகிறது.
தற்போது அதை விட கூடுதல் வசதியுடைய புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தை காஞ்சிபுரத்தில் அமைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இதுவரை 50 சதவிகித பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
இந்த ஆராய்ச்சி மையம் திறக்கப்பட்டால் நாடே உற்றுநோக்கும் மிகப்பெரிய புற்றுநோய் ஆராய்ச்சி மையமாக காஞ்சிபுரம் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை” என்றார்.
மேலும், “மக்கள் நல்வாழ்வுத்துறையில் 1,021 மருத்துவர்கள், 1,266 சுகாதார ஆய்வாளர்கள், 983 மருந்தாளுநர்கள், 2,042 கிராம சுகாதார செவிலியர்கள் பணி நியமனம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. 10 நாட்களில் 1,021 மருத்துவர்கள் எந்தவித முறைகேடும் இல்லாமல் கலந்துரையாடல் நடத்தி பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்” என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: சேமியா துவரம்பருப்பு பாத்
டைவர்ஸ் கூட இத்தன தடவ பண்ணமாட்டாங்க : அப்டேட் குமாரு
சர்தார் 2 பூஜை நிகழ்ச்சி தேதி இதுதானா?