காஞ்சிபுரம் வளத்தோட்டத்தில் பட்டாசு உற்பத்தி ஆலையில் இன்று (மார்ச் 22 ) பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 10 க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை அருகே வளத்தோட்டம் பகுதியில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக நரேந்திரன் ஃபயர் ஒர்க்ஸ் எனப்படும் பட்டாசு உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது.
இங்கு திருவிழாவிற்கான பட்டாசுகள் தயாரிக்கபட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று (மார்ச் 22 ) வழக்கம் போல் இந்த பட்டாசு ஆலையில 30-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்த நிலையில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்தானது ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஆலையில் பணிபுரிந்த 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் , இந்த வெடி விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து வெடி விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி, காஞ்சிபுரம் சரக டிஐஜி பகலவன்,காஞ்சிபுரம் எஸ்.பி.டாக்டர் எம்.சுதாகர், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி ஆகியோர் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டெல்லியில் நிலநடுக்கம்: விடிய விடிய சாலையில் தஞ்சம்!
பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்: ஓபிஎஸ் வாதம்!