பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிறையில் ஸ்டண்ட் மாஸ்டர் கண்ணன், ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருக்கிறார்.
பெரியார் சிலை குறித்து அவதூறு கருத்து தெரிவித்த ஸ்டண்ட் மாஸ்டர் கனல்கண்ணன் புதுச்சேரியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
தமிழகம் முழுவதும் கடந்த மாதம் இந்து முன்னணி அமைப்பு சார்பில் இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சாரம் என்ற பயணம் தொடங்கி நடைபெற்று வந்தது.
ஆகஸ்ட் 1-ம் தேதி சென்னையில் நடைபெற்ற அதன் நிறைவு விழாவின் போது பேசிய ஸ்டண்ட் மாஸ்டரும், இந்து முன்னணி அமைப்பின் மாநில கலை மற்றும் பண்பாட்டுத் துறை தலைவருமான கனல் கண்ணன்,
“இந்துவாக இருப்பதை எண்ணி பெருமைப்படுகிறேன். மேலும் வாளெடுத்து சண்டை போட்ட காலம் மாறி இப்போது மதமாற்றம் என்ற பெயரில் நாடு பிடிக்கிறார்கள் ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியில் வரும்போது அங்கு ஒரு சிலை இருக்கிறது.
அதில் கடவுள் இல்லை என எழுதப்பட்டிருக்கிறது. அந்த சிலை எப்போது உடைக்கப்படுகிறதோ அதுதான் இந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும்” என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.
அவரின் இந்த கருத்துக்கு திராவிட இயக்க ஆர்வலர்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ள கனல்கண்ணனை கைது செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை சைபர் கிரைம் போலீசிலில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் கனல் கண்ணன் மீது கலகம் செய்யத் தூண்டுதல், அவதூறு செய்தி மூலம் பொதுமக்களிடையே விரோதத்தைத் தூண்டுவது ஆகிய பிரிவுகளின் கீழ் கடந்த 3-ம் தேதி போலீஸ் வழக்குப்பதிவு செய்தது.
வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து கனல் கண்ணன் தலைமறைவானார். முன் ஜாமீன் கேட்டு அவர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்தநிலையில் கனல் கண்ணன் புதுச்சேரியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆகஸ்டு 15 ஆம் தேதி கைது செய்தனர்.
புழல் சிறையில் அடைக்கப்பட்ட கனல் கண்ணன் கடந்த 25 ஆம் தேதி ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
விசாரணை ஆரம்பக்கட்டத்தில் உள்ளதால் சாட்சியங்களை கலைக்கக்கூடும் என்று கூறி நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்தநிலையில் அவர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்டு 27) மனுதாக்கல் செய்துள்ளார்.
கனல் கண்ணனின் ஜாமீன் மனு நீதிபதி இளந்திரையன் முன்பு வரும் 29-ம் தேதியன்று விசாரணைக்கு வர உள்ளது.
பெரியார் சிலை குறித்து அவதூறு : ஸ்டண்ட் மாஸ்டர் கனல்கண்ணன் கைது!