உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துகளைக் கொடுக்கக்கூடியது கம்பு. வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற கம்புவில் பருப்பு சேர்த்து சாதம் செய்து அசத்தலாம். சாதம் வேண்டாம் என்று ஒதுக்கும் உங்கள் குழந்தை, இந்த கம்பு – பருப்பு சாதத்தை விரும்பி சாப்பிடுவார்கள்.
என்ன தேவை?
கம்பு – ஒரு கப்
துவரம்பருப்பு – அரை கப்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – அரை டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு
தாளிக்க…
கடுகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
வறுத்த வேர்க்கடலை – 2 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
புளியை ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். குக்கரில் கம்பு, துவரம்பருப்பு சேர்த்து, மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து மூடி 4 விசில்விட்டு இறக்கவும். வாணலியில் தேங்காய் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வேர்க்கடலை தாளிக்கவும். அதனுடன் புளிக்கரைசல், உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். பிறகு, வேகவைத்த சாதம் சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.