”மகள்‌ ஷர்மிளா”: புதிய காரை பரிசாக வழங்கி கமல்ஹாசன் வாழ்த்து!

Published On:

| By christopher

தனது பண்பாட்டு மையம் சார்பில் இன்று (ஜூன் 26) பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு புதிய கார் ஒன்றினை பரிசாக வழங்கி கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கோவை வடவள்ளியை சேர்ந்த ஷர்மிளா காந்திபுரத்தில் இருந்து சோமனூர் நோக்கி செல்லும் தனியார் பேருந்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

அவரது முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோர் ஷர்மிளா ஓட்டும் தனியார் பேருந்தில் பயணித்து அவருக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

இதற்கிடையே, ஷர்மிளாவை தனியார் பேருந்து நிறுவனம் பணி நீக்கம் செய்ததாக தகவல் வெளியானது.

கனிமொழி எம்.பி. பேருந்தில் பயணித்தபோது டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

அதனைத்தொடர்ந்து ஷர்மிளாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட எம்.பி. கனிமொழி,  வேறு வேலைக்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.

இந்த நிலையில் பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கமல் பண்பாட்டு மையம் சார்பில் புதிய கார் ஒன்று பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கான காசோலையை மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் இன்று தனது ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தில் வழங்கினார்.

ஊழியர் டூ தொழில்முனைவோர்!

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப்‌ போக்குவரத்துக்‌ கழகத்தின்‌ முதல்‌ பெண்‌ ஓட்டுநர்‌ வசந்தகுமாரி முதல்‌ பெண்‌ ஆம்புலன்ஸ்‌ ஓட்டுநர்‌ வீரலட்சுமி போல கோயம்புத்தூரில்‌ முதன்முறையாக தனியார்‌ பேருந்து ஓட்டுநராக இருந்தவர்‌ ஷர்மிளா.

பேருந்து ஓட்டுநராக வரவேண்டுமெனும்‌ தன்னுடைய கனவிற்காக உழைத்து சவாலான பணியை திறம்படச்‌ செய்து வந்தார்.‌ அதற்காகப்‌ பல்வேறு தரப்பின்‌ பாராட்டுதல்களைப்‌ பெற்றுள்ளார்‌.

தன்‌ வயதையொத்த பெண்களுக்குச்‌ சிறந்த முன்னுதாரணமாகத்‌ திகழ்ந்த ஷர்மிளா குறித்த சமீபத்திய விவாதம்‌ என்‌ கவனத்திற்கு வந்து மிகுந்த வேதனை அடைந்தேன்‌.

ஷர்மிளா ஓர்‌ ஓட்டுநராக மட்டுமே இருந்துவிட வேண்டியவர்‌ அல்ல. பல்லாயிரம்‌ ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டியவரென்பதே என்‌ நம்பிக்கை.

கமல்‌ பண்பாட்டு மையம்‌ தனது பங்களிப்பாக ஒரு புதிய காரை ஷர்மிளாவிற்கு வழங்குகிறது.

வாடகைக்‌ கார்‌ ஓட்டும்‌ தொழில்முனைவராக தனது பயணத்தை ஷர்மிளா மீண்டும்‌ தொடரவிருக்கிறார்‌.

ஆண்டாண்டு காலமாய்‌ அடக்கிவைக்கப்பட்ட பெண்கள்‌ தங்கள்‌ தளைகளை உடைத்து தரணி ஆளவருகையில்‌ ஒரு பண்பட்ட சமூகமாக நாம்‌ அவர்களின்‌ பக்கம்‌ நிற்க வேண்டும்‌ என்று நான்‌ விரும்புகிறேன்‌. மகள்‌ ஷர்மிளாவிற்கு என்‌ மனமார்ந்த வாழ்த்துகள்‌.” என்று கமல் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

’எழுத்தாளர்களுக்கு மரியாதையே இல்லை’: படவிழாவில் பாக்யராஜ் வேதனை!

பொறியியல் படிப்பு: கலந்தாய்வு தேதியில் மாற்றம்!

திருக்குறளுக்கு மெட்டு: பரதநாட்டிய கலையில் அசத்திய லக்‌ஷிதா

kamalhasan gifts new car
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share