தேசிய கல்வி நிறுவன தரவரிசைக் கட்டமைப்பின் தரவரிசையில் சென்னை ஐஐடி தொடர்ந்து 6-வது முறையாக முதல் இடம் பிடித்துள்ளதை பற்றி நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தது.
ஒன்றிய அரசு இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், ” சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), மத்திய அரசின் கல்வி அமைச்சகம் அறிவிக்கும் தேசிய கல்வி நிறுவன தரவரிசைக் கட்டமைப்பின் தரவரிசையில் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், 9-வது ஆண்டுக்கான தேசிய கல்வி நிறுவன தரவரிசை முடிவுகளை தில்லியில் இன்று (12 ஆகஸ்ட்) நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிவித்து பரிசுகளையும் வழங்கினார்.
இந்தியக் கல்வி வரலாற்றில் இதுவரை கண்டிராத சாதனையாக, சென்னை ஐஐடி ‘ஒட்டுமொத்த’ பிரிவில் தொடர்ந்து 6-வது ஆண்டாக முதலிடத்தைத் பிடித்திருப்பதுடன், 2016-ல் தரவரிசை வெளியிடத் தொடங்கியது முதல் கடந்த 9 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக ‘பொறியியல்’ பிரிவிலும் முதலிடத்திலேயே நீடித்து வருகிறது.
‘ஆராய்ச்சி நிறுவனங்கள்’ பிரிவுக்கான தரவரிசையில் கடந்த ஆண்டு இரண்டாம் இடத்தில் இருந்த சென்னை ஐஐடி தற்போது முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. ‘கண்டுபிடிப்புகள்’ பிரிவில் (கண்டுபிடிப்பு சாதனைகளுக்கான கல்வி நிறுவனங்களின் அடல் தரவரிசை என்ற பெயரில் இருந்தது) முந்தைய ஆண்டில் இரண்டாம் இடத்திலிருந்து தற்போது முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
இதற்கான விருதுகளை சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி நேரில் பெற்றுக் கொண்டார். சென்னை ஐஐடி டீன் (திட்டமிடல்) பேராசிரியர் ஆர்.சாரதி, டீன் (ஆசிரியர்) பேராசிரியர் கே.முரளி, பதிவாளர் டாக்டர் ஜேன் பிரசாத் ஆகியோர் உடனிருந்தனர்.” என்று குறிப்பிட்டிருந்தது.
இந்த சாதனை குறித்து இன்று(ஆகஸ்ட் 13) பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ஐஐடி இயக்குநர் காமகோடி, “ரொம்ப மகிழ்ச்சியாக நாள் எங்களுக்கு. தொடர்ந்து 9-வது முறையாக பொறியியல் பிரிவில் முதல் இடத்தையும், ஒட்டுமொத்த பிரிவில் தொடர்ந்து 6-வது முறையாக முதல் இடத்தையும் தக்கவைத்துள்ளோம்.
இந்த மகத்தான வெற்றிக்கு காரணம், மாணவர்கள், பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசு, ஒன்றிய கல்வி அமைச்சகம் மற்றும் எங்களுக்கு நிதி வழங்கும் பல்வேறு அமைச்சகங்கள். இதற்கு காரணமான அனைவருக்கும் நன்றி. ஊடக நண்பர்களுக்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன்.
இந்த ஆண்டு நாங்கள் நடத்திய 200க்கும் மேற்பட்ட பத்திரிக்கை சந்திப்புகளுக்கு வந்த அனைத்து நிருபர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.” என்றார்.
NIRF பட்டியலின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசிய அவர் “நமது நாட்டின் 15-35 வயதுள்ள மக்களில் 75% பேர் கிராமப் பகுதிகளில் வசிக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம், கல்வி போய்ச் சேர வேண்டும். அதற்காக பி.எஸ். டேட்டா சைன்ஸ், பி.எஸ். எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ், தமிழ்நாடு அரசுடன் சேர்ந்து ‘எலக்ட்ராணிக்ஸ் கிட்’ வைத்து மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பது போன்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.
இந்த முயற்சிகளின் காரணமாக , கிட்டத்தட்ட 30,000 மாணவர்கள் ஐஐடி சென்னையில் டேட்டா சைன்ஸ் படிக்கிறார்கள். அதில் 5000 மாணவர்கள் உதவித்தொகை பெற்றுப் படிக்கிறார்கள். சஸ்டைனபில் டெவலப்மண்ட் கோல் 4-ஐ நிறைவேற்றும் விதமாக, கிராமப்புற மாணவர்களுக்கு கல்வியைக் கொண்டு சென்றுள்ளோம்.
இரண்டாவதாக, மெடிக்கல் சைன்ஸ், ஏஐ போன்ற புது வகையான படிப்புகளை ஆரம்பித்துள்ளோம். இதையும் தாண்டி பல ’ஸ்டார்ட் அப்’கள் உருவாக்கியிருக்கிறோம். பல பேடண்ட்களை பதிவு பண்ணியுள்ளோம். மைன்ட் க்ரோ என்கிற ஸ்டார்டப் இந்தியாவிலேயே முதல் முறையாக ‘ஐஒடி சிப்’ கண்டுபிடித்துள்ளார்கள். இது போன்ற பல முயற்சிகள், சென்னை ஐஐடியின் தரத்தை உயர்த்தியுள்ளது.” என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசினார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
சினிமாவில் கூட சண்டை போடாத சேரன் … நடுரோட்டில் இறங்கி கோபப்பட வைத்த ஹாரன்!
டாஸ்மாக் வேணும்னு சொல்ல வெச்சாங்க?: தருமபுரியில் திடீர் ட்விஸ்ட்!
ரூ.525 கோடி நிதி மோசடி… பாஜக கூட்டணி தலைவர் தேவநாதன் கைது!