விழுப்புரம் அருகே கழுப்பெரும்பாக்கம் அரசு மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் மதுபோதையில் பள்ளியிலேயே ஆட்டம் போட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கடற்கரை ஓரமாக கழுப்பெரும்பாக்கம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 800 மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த பள்ளிக்கு பின்புறத்தில் உள்ள வயல்களில் சவுக்கு, நெல் போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டு வருகிறது.
கடந்த வாரத்தில் பள்ளிக்கு பின்புறத்தில் உள்ள சவுக்கு தோப்பில் சில மாணவர் – மாணவிகள் கூட்டம் கூட்டமாக புகைப்பிடிப்பதும், மது அருந்துவதுமாக இருந்துள்ளனர்.
அதில் சில மாணவிகளுக்கு போதை ஏறி பள்ளிக்குள் வந்து ஆட்டம் ஆடுவதை பார்த்த ஆசிரியர்களும், மற்ற மாணவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் பள்ளிக்கு அவமானம் என்று நினைத்து, அதை மூடி மறைக்கும் வகையில் ஆசிரியர்களே வாகனத்தை ஏற்பாடு செய்து அந்த மாணவிகளை அவர்களது வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சவுக்கு தோப்பில் மாணவர்கள் மது அருந்தி, புகை பிடித்து கொண்டிருந்தபோது போதையில் சவுக்கு தோப்புக்கு தீ வைத்துவிட்டனர்.
இந்த தகவல் சவுக்கு தோப்பு உரிமையாளருக்கு தெரிந்து பள்ளி ஆசிரியர்களிடம் முறையிட்டுள்ளார். “மாணவர்கள் பள்ளிக்கு படிக்க வருகிறார்களா? அல்லது சவுக்குத் தோப்பில் ஆட்டம் போட வருகிறார்களா? மாணவர்களை கட்டுப்படுத்த மாட்டீர்களா” என கோபமாக கேட்டுள்ளார்.
கழுப்பெரும்பாக்கம் அரசு பள்ளி மாணவர்கள் சவுக்கு தோப்புக்கு செல்லும் வீடியோ நம்மிடம் இருந்தாலும் மாணவர்களின் நலன் கருதி அதை மின்னம்பலம் வெளியிடவில்லை.
இந்த சம்பவம் நடந்த சில நாட்களிலேயே பள்ளிக்குள் இரண்டு மாணவர்களுக்கு இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் மாணவர்களுக்கு ரத்த காயங்கள் ஏற்பட்டதால் விஷயம் கோட்டக்குப்பம் காவல்துறை வரை சென்றது.
இப்படி, அரசு பள்ளிகள் பல விதமான சர்ச்சைகளுக்கு உள்ளாகி வரும் நிலையில், கழுப்பெரும்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த சம்பவத்தை பற்றி விளக்கம் கேட்க, அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டோம்.
அவர் போனை எடுக்கவில்லை.
இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகனை தொடர்பு கொண்டு கழுப்பெரும்பாக்கம் அரசு மேல் நிலை பள்ளி மீதுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டோம்.
இதற்கு அவர், “இதுவரை என் கவனத்துக்கு இந்த விவகாரம் வரவில்லை. நான் உடனடியாக அந்த பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு கேட்கிறேன்” என்றார்.
மீண்டும் அவரை தொடர்பு கொண்ட போது, “அந்தப் பள்ளி தலைமை ஆசிரியரை உங்களை தொடர்புகொண்டு விளக்கமளிக்க சொன்னேன். இன்னும் உங்களை தொடர்புகொண்டு பேசவில்லையா. நான் விசாரிக்கிறேன்” என்றார்.
இந்நிலையில் கோட்டக்குப்பம் காவல்நிலைய ஆய்வாளர் விஷ்வநாதனை தொடர்புகொண்டு, கழுப்பெரும்பாக்கம் அரசு பள்ளி விவகாரம் குறித்து கேட்டோம்.
அதற்கு அவர், “ஒரு வாரத்துக்கு முன்பு மாணவர்களுக்குள் தாக்கிக் கொண்டு காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்க வந்தனர். அவர்களின் வாழ்க்கை வீணாகி போய்விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் இரு தரப்பு பெற்றோர்களையும் அழைத்து அறிவுரைகளை வழங்கினோம். இதனால் அவர்களுக்குள் சமரசம் ஏற்பட்டு புகாரை வாபஸ் வாங்கிக்கொண்டு சென்றுவிட்டனர்.
பள்ளியில் ஏதோ சிறு சிறு சம்பவங்கள் நடப்பதாக தகவல் வந்தது. நான் விரைவில் அந்த பள்ளிக்கு சென்று,விழிப்புணர்வு நடத்த இருக்கிறேன். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மட்டும் அறிவுரைகள் வழங்கினால் போதாது. இன்றைய சூழலில் பெற்றோர்களும் மாணவர்களை அன்றாடம் கவனிக்க வேண்டும்” என்றார்.
டாஸ்மாக் விதிப்படி, மதுபான கடைகளில் 21 வயதுக்கு மேற்பட்டோருக்குதான் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும். இந்தவிதி, அந்தந்த கடைகள் முன்பே எழுதி வைக்கப்பட்டிருக்கும். ஆனால் அதை விற்பனையாளர்களே மதிப்பதில்லை. என்பதால் தான் பள்ளி மாணவர்களின் கைக்கு எளிதாக மதுபானங்கள் கிடைத்துவிடுகிறது.
ஏற்கனவே, 2022ஆம் ஆண்டு சீருடையில் மாணவிகள் மதுபானம் அருந்தும் வீடியோ வைரலானது. இதனால் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்க தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத், “சீருடையுடன் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் புகைப்படம் அதிர்ச்சியைத் தருகிறது. நாடு எங்குச் சென்று கொண்டிருக்கிறது என தெரியவில்லை. இதற்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும். இல்லையெனில், மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும்” என எச்சரித்திருந்தனர்.
எனினும் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது என்பதை கழுப்பெரும்பாக்கம் சம்பவம் காட்டுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
வணங்காமுடி
“இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும்… ஆனால் : மீண்டும் பேசுபொருளான துரைமுருகனின் பேச்சு!
“இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும்… ஆனால் : மீண்டும் பேசுபொருளான துரைமுருகனின் பேச்சு!
கல்வி அமைச்சருக்கு புடவை பார்சல் அனுப்புங்க..
ரோசம் வருதான்னு பார்ப்போம்..😡