கள்ளழகரும் பச்சைப் பட்டும்… நிறத்தின் பின்னால் இருக்கும் நம்பிக்கை!
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு இன்று (மே 5) நடைபெற்றது.
இந்த ஆண்டு கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கும் போது பக்தர்கள் அனைவரும் மதுரையே அதிரும் அளவிற்குச் சந்தோஷத்தில் கோவிந்தா கோவிந்தா என பக்தி கோஷங்களை எழுப்பினர்.
பக்தர்களின் இந்த அதீத உற்சாகத்திற்கு காரணம் இன்று கள்ளழகர் உடுத்தி வந்த பச்சை பட்டு தான்.
கள்ளழகரின் பச்சை பட்டுக்கும், பக்தர்களின் உற்சாகத்திற்கும் இருக்கும் தொடர்பு என்ன? கள்ளழகரின் பச்சை பட்டிற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன என்பதைக் காணலாம்.
கள்ளழகர் ஆடை ஐதீகம்
ஒவ்வொரு ஆண்டும் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும்போது எந்த வண்ணப் பட்டு கட்டி இறங்குகிறாரோ, அதற்கேற்றவாறு அந்த வருடத்தில் நல்லது கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
நாட்டில் நடக்கவிருக்கும் நிகழ்வுகளைத் தான் கட்டும் பட்டு மூலம் உணர்த்திவிடுவார் கள்ளழகர் என்று ஐதீகம் உள்ளதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
கள்ளழகரின் அலங்காரப் பொருட்கள் அடங்கிய பெரிய மரப்பெட்டிக்குள் பச்சை, சிவப்பு, வெள்ளை, ஊதா, மஞ்சள் என பல வண்ணங்களில் பட்டுகள் இருக்கும்.
கோயிலின் தலைமைப் பட்டர் அந்த பெட்டிக்குள் கை விட்டு ஏதாவதொரு பட்டு வஸ்திரத்தை எடுப்பார்.
அவர் கையில் எந்த வண்ணப் பட்டு வருகிறதோ, அதுதான் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் போது அணிவிக்கப்படும்.
பச்சை நிற பட்டு உடுத்தி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும். சிவப்பு நிற பட்டு உடுத்தி வந்தால் விளைச்சல் சரியாக இருக்காது, நாட்டில் அமைதி இருக்காது, பேரழிவு ஏற்படும்.
வெள்ளை மற்றும் மஞ்சள் நிற பட்டு உடுத்தி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும்.
மஞ்சள் நிற பட்டு உடுத்தி வந்தால் மங்களகரமான நிகழ்வுகள் அதிகம் நடைபெறும் என்பது ஐதீகம்.
கடந்த சில ஆண்டுகளாகவே கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும்போது பச்சை நிற பட்டு உடுத்தி தான் இறங்கினார். இந்த ஆண்டு எந்த நிற பட்டு உடுத்தி வருவார் கள்ளழகர் என்று பக்தர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கள்ளழகர் இந்த ஆண்டும் பச்சை பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார். இதனால் உற்சாக வெள்ளத்தில் மிதந்த பக்தர்கள் அழகர் மீது தண்ணீரை பாய்ச்சியும் பக்தி கோஷங்களை எழுப்பியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மோனிஷா
பி டி ஆர் ஆடியோ முதல் ஸ்டாலின் வீடியோ வரை: சர்ச்சை தொடங்கி முடிந்த பின்னணி!
“டெஸ்ட்” படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் பின்னணி பாடகி!