கள்ளழகர் திருவிழா : நீர் பீய்ச்சி அடிக்க தடை விதித்த நீதிமன்றம்!

Published On:

| By indhu

Kallazhagar Festival - Restrictions on beating water scarecrows!

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வின்போது உயர் அழுத்த மோட்டர்களை பயன்படுத்தி நீர் பீய்ச்சி அடிக்கத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று (ஏப்ரல் 3) உத்தரவிட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு 23ஆம் தேதி நடைபெறுகிறது.

அந்த நிகழ்வின்போது, பாரம்பரிய முறைப்படி ஆட்டுத்தோலை பயன்படுத்தி தோல்பைகளில் நறுமண நீரை நிரப்பி துருத்தி என்னும் சிறு குழாய் மூலம் கள்ளழகர் மீது நீரை பீய்ச்சி அடிப்பது வழக்கமான ஒன்றாகும்.

இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நாகராஜன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், கடந்த சில நாட்களாக பக்தர்கள் பாரம்பரிய முறையை மீறி சிறு இயந்திரங்கள் மூலம் கள்ளழகரின் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்கிறார்கள்.

இதனால் சாமி சிலையும், ஆபரணங்களும் சேதமடைவதாகவும், அதனால், அதிக விசையுள்ள பம்புகள் மூலம் கள்ளழகர் மீது நீரை பீய்ச்சி அடிக்க தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “அதிக விசையுள்ள பம்புகள் மூலம் கள்ளழகர் மீது நீர் பீய்ச்சி அடிக்கப்படுவதால் பாரம்பரிய வழக்கம் மாறுகிறது.

அதனால், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வின்போது உயர் அழுத்த மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீர் பீய்ச்சி அடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.

பாரம்பரிய முறைப்படி, தோல் பை வைத்து மட்டுமே தண்ணீர் பீய்ச்ச வேண்டும்.

கள்ளழகர், அழகர் மலையில் இருந்து வைகை ஆறு வரும் வரை, இடையே எந்த இடத்திலும் தண்ணீர் பீய்ச்சி அடிக்க கூடாது” என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மோடி சூறாவளி பிரச்சாரம்!

GOLD RATE: வீழ்வேனென்று நினைத்தாயோ… உச்சம் தொட்டது தங்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel