கள்ளக்குறிச்சி கலவரம்: டிஎன்பிஎஸ்சி தேர்வு மையம் மாற்றம்!

Published On:

| By srinivasan

கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கலவரத்தால் முழுமையாக சேதமடைந்துள்ளதால், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டி.என்.பி.எஸ்.சி தேர்வு வேறு மையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தட்டச்சர், இளநிலை உதவியாளர் பணிகளில் காலியாக உள்ள 7,301 இடங்களுக்கான ஆட்சேர்ப்பு ( குரூப் 4 தேர்வு ) அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடத்த மார்ச் 29ம் தேதியன்று வெளியிட்டது.

இதன்படி வரும் 24ம் தேதி தமிழகம் முழுவதும் இந்த தேர்வு காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது.

இத்தேர்வினை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 42600 பேர் 143 தேர்வு மையங்களில் எழுத உள்ளனர்.

இந்த நிலையில் கள்ளகுறிச்சி சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பள்ளியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வன்முறையில் இறங்கி பள்ளியில் புகுந்து தாக்கி அடித்து நொறுக்கினர்.

வகுப்பறைகள் முற்றிலுமாக சேதப்படுத்தப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதால் தற்போது உபயோகப்படுத்தும் நிலையில் இல்லை என அதிகாரிகள் ஆய்வறிக்கையில் தெரிவித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுத இருந்த 1200 டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதில் 900 பேர் கள்ளக்குறிச்சி வட்டம், நீலமங்கலம், ஏகேடி மெட்ரிக் பள்ளியிலும் மற்ற 300 பேர் ஏ.கே.டி. நினைவு வித்யா சாகத் பள்ளி (சிபிஎஸ்சி)யிலும் தேர்வு எழுத இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான புதிய தேர்வு நுழைவு சீட்டுகள் (ஹால் டிக்கெட்) இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும்” என்று கள்ளகுறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இன்று (ஜூலை 19) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

க.சீனிவாசன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share