சின்னசேலம் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடலுக்கு இன்று (ஜூலை 23) இறுதி அஞ்சலி நடைபெற்று வருகிறது.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடலைப் பெற்றுக் கொள்வதற்கு அவரது பெற்றோர் நீதிமன்றத்தில் நேற்று சம்மதம் தெரிவித்தனர். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடல் பெற்றோரிடம் இன்று காலை ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து மாணவியின் உடல் ஆம்புலன்சில் இறுதிச் சடங்கிற்காக அவரது சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை நோக்கி புறப்பட்டது. ஆம்புலன்ஸ் வேப்பூர் அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென தனியார் வாகனம் ஒன்று காவல்துறை வாகனத்தை லேசாக மோதியது. இதனால் பின்னால் வந்து கொண்டிருந்த ஆம்புலன்ஸ், காவல்துறை வாகனத்தில் மோதியது. இதில் ஆம்புலன்ஸின் முன் பக்கம் லேசாக சேதமடைந்தது.
சாலை முழுவதும் போலீஸ் பாதுகாப்பு குவிக்கப்பட்டு இருந்த நிலையில் , ஆம்புலன்ஸ் மெதுவாகவே சென்றதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து பெரியநெசலூர் நோக்கி வந்துகொண்டிருந்த ஆம்புலன்ஸையும், போலீஸ் வாகனத்தையும் பார்த்த உறவினர்களும் கிராம மக்களும் கதறி அழத் தொடங்கினர். ஆம்புலன்ஸ் வீட்டை அடைந்ததும் மாணவியின் உடல் இறக்கப்பட்டு ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்டது.
பின்னர், ஒன்று திரண்டு வந்து கிராம மக்கள் ஸ்ரீமதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். மறுபக்கம் இறுதிச் சடங்குகளுக்கான வேலைகளும் நடக்கின்றன. காலை 11 மணிக்குள் அடக்கம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறுதி அஞ்சலி நடைபெறுவதை முன்னிட்டு பெரியநெசலூர் கிராமமே போலீஸ் வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களைத் தவிர்க்கக் கிராம எல்லையில் தற்காலிக சோதனை சாவடி அமைத்தும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பிரியா