”கள்ளக்குறிச்சி மாணவி பயன்படுத்திய செல்போனை உடனே காவல் துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும்” என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை மாதம் 13ஆம் தேதி உயிரிழந்தார். மாணவி மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அதைக் கண்டறிய வேண்டும் என்றும் தொடர்ந்து பள்ளியை முற்றுகையிட்டு நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக மாறியது.
இதனால் போராட்டக்காரர்கள் பள்ளியைச் சேதப்படுத்தி சூறையாடிச் சென்றனர். இந்த வழக்கில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களும், பள்ளியைச் சேர்ந்த நிர்வாகிகளும், ஆசிரியைகளும் கைது செய்யப்பட்டனர். இது சம்பந்தமான வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக, தனது மகள் மரண வழக்கில் நியாயமான விசாரணை நடத்தக் கோரி ஸ்ரீமதியின் தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் தேதி அம்மனு நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை தரப்பில், ‘நான்கு முறை இந்த வழக்கு சம்பந்தமாக சம்மன் அனுப்பியும் மாணவி பயன்படுத்திய செல்போனை விசாரணைக்காக இன்னும் ஒப்படைக்கவில்லை” என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட மாணவியின் தந்தை தரப்பு வழக்கறிஞர், ”மாணவி ஸ்ரீமதி செல்போன் வைத்திருக்கவில்லை என்றும் விடுதி வார்டன் செல்போனில் இருந்துதான் பேசினார்’ என தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ”மாணவியிடம் செல்போன் இருந்தும் அதனை மறுத்தால் அது சட்டப்படி தவறு. செல்போன் இருந்தால் அதை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று எச்சரித்தார். கள்ளக்குறிச்சி மாணவியின் வழக்கு தொடர்பாக நாம் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வருகிறோம்.
அந்த வகையில், இவ்வழக்கு தொடர்பாக இன்று (டிசம்பர் 23) நீதிபதி சந்திரசேகரன் முன் மாணவி பெற்றோர் தரப்பு வழக்கறிஞர் சங்கரசுப்பு ஆஜராகி முறையீடு ஒன்றை செய்தார். அப்போது, ’மாணவியின் செல்போனை காவல்துறையிடம் தாங்கள் ஒப்படைக்க மாட்டோம். அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைக்க தயாராக இருக்கிறோம். இதற்கு நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு வழக்கறிஞர் சந்தோஷ், செல்போனை பெற்றுக்கொள்ள மறுத்ததோடு, ”செல்போனை புலன் விசாரணை நடத்தி வரும் காவல் துறையினரிடம்தான் ஒப்படைக்க வேண்டும்” என திட்டவட்டமாக தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ”வழக்கை புலன் விசாரணை செய்துவரும் காவல்துறையிடம் செல்போனை வழங்கினால் உடனடியாக அதனை தடயவியல் சோதனைக்கு அனுப்பி அறிக்கை பெற முடியும்” என்று கூறிய நீதிபதி, பெற்றோரின் கோரிக்கையையும் நிராகரித்தார்.
மேலும், ”இனிமேலும் தாமதிக்காமல் மாணவி பயன்படுத்திய செல்போனை உடனே காவல் துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும்” என பெற்றோர் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
”கள்ளக்குறிச்சி மாணவி பயன்படுத்திய செல்போனை உடனே காவல் துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும்” என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெ.பிரகாஷ்
கால்பந்து நாயகன் மெஸ்சி: கெளரப்படுத்திய ரசிகர்கள்!
வங்கதேச டெஸ்ட்: ரிஷாப், ஸ்ரேயாஸ் இணையால் நிமிர்ந்தது இந்தியா