மாணவி ( ஸ்ரீமதி ) மரணம் தொடர்பாக அவரது தந்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் இன்று (ஜூலை 21) உத்தரவிட்டுள்ளது.
மாணவியின் உடல் மறு உடற்கூறாய்வின் போது தங்கள் தரப்பு மருத்துவரை நியமிக்க வேண்டும் என்று அவரது தந்தை உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 18 ஆம் தேதி மனு தாக்கல் செய்தார். அந்த மனு ஜூலை 19 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மாணவியின் உடல் மறு உடற்கூறாய்வின் போது பெற்றோர்கள் பங்கு பெறலாமே தவிர பெற்றோர் தரப்பில் மருத்துவர்கள் பங்கு பெற அனுமதி அளிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கை பின்னர் விசாரிப்பதாக நீதிபதி கூறினார்.
அதன்படி இன்று ( ஜூலை 21 ) இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பி.ஆர்.கவாய் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, “நீங்கள் கூறும் மருத்துவர்களை ஏன் நியமிக்க வேண்டும்? உயர் நீதிமன்றம் நியமித்துள்ள மருத்துவர்களை நீங்கள் எப்படி குறைகூற முடியும்? இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் முறையிட வேண்டியதுதானே?” என்று நீதிபதி பி.ஆர். கவாய் கேள்வி எழுப்பினார்.
அதற்கு மாணவியின் தந்தை தரப்பில் “உரிய, நியாயமான விசாரணையை தமிழ்நாடு அரசு செய்யவில்லை. எனவே இந்த வழக்கை உச்ச நீதிமன்றமே விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
இதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அரிஸ்டாட்டில், “உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி மாணவியின் உடல் இரண்டு முறை உடற்கூறாய்வு செய்யப்பட்டுள்ளது. உடற்கூறாய்வு அறிக்கையின் தகவலும் பெற்றோருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவியின் உடலை வாங்க மறுப்பு தெரிவித்து கால தாமதம் செய்து வருகின்றார்கள்” என்பதை சுட்டிக் காட்டினார் .
இதையடுத்து மனுவை திரும்ப பெற்றுகொள்ளுமாறு மாணவியின் பெற்றோருக்கு நீதிபதி அறிவுரை கூறியுள்ளார். மனுவை திரும்ப பெறவில்லை என்றால் வழக்கை தள்ளுபடி செய்வதாக கூறினார். தேவைப்பட்டால் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் மாணவியின் பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் அறிவுரையை அடுத்து மாணவியின் உடலை பெற்றுக் கொள்வதற்கும் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளார்கள்.
மோனிஷா