கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்பட ஐந்து பேருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியமூர் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூரைச் சேர்ந்த மாணவி கடந்த மாதம் 13ஆம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.
மாணவியின் தாய் செல்வி சின்னசேலம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதனடிப்படையில், பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியர் ஹரிபிரியா, கணித ஆசிரியர் கீர்த்திகா ஆகிய ஐந்து பேரை கைது செய்த போலீசார், சேலம் சிறையில் அடைத்தனர்.
மாணவி மரணமடைந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

கைது செய்யப்பட்ட 5 பேரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்றம் கடந்த வாரம் தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று (ஆகஸ்ட் 26) விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி, பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.
மனுதாரர்கள் தரப்பில், ஆசிரியர்கள் படி என்று சொன்னதன் காரணமாகத் தான் மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படவில்லை. அதனால் பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, பள்ளி நிர்வாகிகள் 5 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
செல்வம்
கள்ளக்குறிச்சியில் 281 சவரன் கொள்ளை: வயலில் சிதறிகிடந்த நகைகள்!