கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: தமிழக காவல் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

தமிழகம்

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் தமிழக காவல் துறை பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை மாதம் 13ஆம் தேதி உயிரிழந்தார்.

மாணவி மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அதைக் கண்டறிய வேண்டும் என்றும் தொடர்ந்து பள்ளியை முற்றுகையிட்டு நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக மாறியது.

இதனால் போராட்டக்காரர்கள் பள்ளியைச் சேதப்படுத்தி சூறையாடிச் சென்றனர். இந்த வழக்கில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களும், பள்ளியைச் சேர்ந்த நிர்வாகிகளும், ஆசிரியைகளும் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், ஜிப்மர் மருத்துவமனையின் ஆய்வறிக்கைகளை தங்கள் தரப்பிற்கு வழங்கக் கோரி மாணவியரின் பெற்றோர் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் நிராகரித்தது.

kallakurichi student case supreme court notice

மேலும், இந்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் வேதியியல் ஆசிரியை ஹரிப்ரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகிய 5 பேரும் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கில் பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்ட 5 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவிற்கு எதிராகவும், ஜிப்மர் மருத்துவமனை அறிக்கையை தங்களுக்கு வழங்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மாணவியின் தாயார் செல்வி சார்பில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று (டிசம்பர் 14) விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா,

“மாணவி மரண விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கும் முன்பு, மாணவியின் உடற்கூறு ஆய்வறிக்கையை உயர் நீதிமன்றம் ஆய்வு செய்யவில்லை.

அந்த அறிக்கை மாணவியின் உடலில் இருந்த சந்தேகப்படும்படியான காயங்களை கருத்தில் கொள்ளவில்லை” என்று வாதிட்டார்.

kallakurichi student case supreme court notice

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ”மாடியில் இருந்து குதித்தால் காயங்கள் ஏற்படும்தானே” என்று கேள்வி எழுப்பியதுடன்,

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரண வழக்கில், பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்கியதற்கு எதிரான மனுவில் தமிழக காவல் துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.

இந்த மனுவுக்கு பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் ஆசிரியைகள் ஹரிப்ரியா, கிருத்திகா ஆகியோரும் பதிலளிக்கவும் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

ஜெ.பிரகாஷ்

நியூசிலாந்தின் சட்டம் இந்தியாவுக்கு தேவை: அன்புமணி

டெல்லி எய்ம்ஸ் ஹேக்கர்: சீனாவின் சதியை முறியடித்த மத்திய அரசு!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.