கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் விசாரணை முடிந்துவிட்டதாக உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியமூரில் செயல்பட்டு வரும் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
மாணவி தற்கொலை செய்து கொண்டதாகப் பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்த நிலையில், மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
போராட்டம் கலவரமாக மாறிய நிலையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது.
மாணவியின் தந்தை ராமலிங்கம், நியாயமான விசாரணை நடத்த கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த வழக்கு கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி நீதிபதி சந்திரசேகர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில், மாணவி பயன்படுத்திய செல்போனை சமர்ப்பிக்கப் பல முறை சம்மன் அனுப்பியும் பெற்றோர் விசாரணைக்கு ஒப்படைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதனை கேட்ட நீதிபதி உடனடியாக மாணவியின் செல்போனை வழங்க வேண்டும் என்றும், அப்படி செல்போனை வழங்கவில்லை என்றால் பெற்றோரிடம் விசாரணை நடத்த உத்தரவிட நேரிடும் எனவும் தெரிவித்து வழக்கு விசாரணையை பிப்ரவரி முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.
இந்த நிலையில், இன்று (பிப்ரவரி 1) மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. மாணவியின் பெற்றோர் தரப்பில், ஸ்ரீமதி பயன்படுத்திய செல்போன் ஜனவரி 20 ஆம் தேதி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் ஜிப்மர் மருத்துவக் குழு நடத்திய பிரேதப் பரிசோதனை அறிக்கை தங்களிடம் வழங்கப்படவில்லை என்று வாதிடப்பட்டது.
தொடர்ந்து விசாரணையின் தற்போதைய நிலை என்ன என்று நீதிபதி கேள்வி எழுப்பியதற்கு, அரசு தரப்பு வழக்கறிஞர் சந்தோஷ் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
மேலும், மாணவி பயன்படுத்திய செல்போன் தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், தடயவியல் சோதனை அறிக்கைக்காகக் காத்திருப்பதாகவும் மற்ற விசாரணைகள் முடிவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தடயவியல் துறை அறிக்கை கிடைத்த ஒரு மாத காலத்திற்குள், விசாரணை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு, ஜிப்மர் குழுவின் பிரேதப் பரிசோதனையின் அறிக்கையை வழங்கக் கோரி விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறு நீதிபதி மனுதாரிடம் கூறினார்.
தொடர்ந்து வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார் நீதிபதி.
மோனிஷா