கள்ளக்குறிச்சி மாணவி மரணத்துக்கு காரணமானது பாலியல் பலாத்காரமோ, கொலையோ இல்லை என உறுதியாக கருத்து தெரிவித்திருக்கிறது உயர் நீதிமன்றம்.
இதன் மூலம் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக மின்னம்பலம்.காம் வெளியிட்ட விரிவான செய்திக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்த உண்மைகளை நீதிபதி தன் கருத்தாகவும் சொல்லியிருக்கிறார்.
கடந்த ஆகஸ்டு 3 ஆம் தேதி, மாணவி ஸ்ரீமதி கொலையா, தற்கொலையா? இரவு முதல் அதிகாலை வரை நடந்தது என்ன? துல்லிய ரிப்போர்ட் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் நாம் கூறியிருந்த தகவல்கள் நீதிபதியின் இன்றைய தீர்ப்பில் இடம்பெற்றிருக்கின்றன.
கள்ளக்குறிச்சி கனியாமூர் மாணவி மரணம் தொடர்பான வழக்கில் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி இளந்திரையன் ஆகஸ்ட் 26ம் தேதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு குறித்து விரிவான நிபந்தனைகளை நீதிபதி இளந்திரையன் இன்று (ஆகஸ்ட் 29) வழங்கினார்.
அப்போது ஆசிரியர்கள் சேலத்தில் தங்கியிருந்து செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும்,
பள்ளி நிர்வாகிகள் மதுரையில் தங்கியிருந்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்து போட வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.
மேலும் விசாரணைக்கு தேவைப்படும் நேரத்தில் ஆஜராக வேண்டும் என்றும், சாட்சியங்களைக் கலைக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தார்.

அந்த நிபந்தனைகள் விதித்த உத்தரவில் இந்த வழக்கு பற்றிய சில முக்கியமான கருத்துகளை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் குறிப்பிட்டிருக்கிறார்.
அதில், ”முதலில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்த பின்னர், இந்திய தண்டனைச் சட்டத்தில் மைனர் பெண்ணை தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவு, போக்சோ சட்டம் தமிழ்நாடு வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவு ஆகியவற்றில் சேர்க்கப்பட்டிருக்கிறது.
மாணவி எழுதிவைத்துள்ள தற்கொலை கடிதத்தின்படி, ‘மனுதாரர்கள் யாரும் தற்கொலைக்கு தூண்டவில்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

நன்றாகப் படிக்கச் சொல்வது ஆசிரியர் பணியில் ஓர் அங்கமே தவிர, தற்கொலைக்குத் தூண்டும் செயல் அல்ல.
இரண்டு முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்ட தமிழக மருத்துவக் குழுவின் அறிக்கை மீது நீதிமன்றம் நியமித்த ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர் குழு கொடுத்த அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது.
அந்த அறிக்கையின்படி, மாணவி மரணத்துக்கு காரணம், பாலியல் பலாத்காரமோ அல்லது கொலையோ இல்லை என உறுதியாகிறது.
மேலும், மாணவியின் பெற்றோர் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் அதில் ஆதாரம் ஏதுமில்லை.
பிரேத பரிசோதனை அறிக்கைக்கு மாறாக மாணவியின் பெற்றோர் கூறும் குற்றச்சாட்டு, ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை.

மாணவி மாடியில் இருந்து விழும்போது, மரத்தில் அடிபட்டதாலேயே அவருக்கு உடலின் பல பகுதிகளில் காயம் ஏற்பட்டிருக்கிறது.
அதனால் ஏற்பட்ட ரத்தக்கசிவுதான் உடலில் இருந்திருக்கிறது என மருத்துவ அறிக்கைகளில் தெளிவாக தெரியவருகிறது.

மேலும், பள்ளியின் 3வது மாடியில் இருந்தது மாணவியின் ரத்தம் அல்ல. ஒரு வண்ணப் பூச்சு என நிபுணர்களின் அறிக்கை கூறுகிறது.
மாணவியின் தற்கொலை கடிதம், சக மாணவிகளின் சாட்சி ஆகியவற்றின் அடிப்படையில் அந்த மாணவி வேதியியல் பாடம் படிப்பதில் சிரமப்பட்டிருந்தது உறுதியாகியுள்ளது.
அதனால் இரு ஆசிரியர்கள் அறிவுரை கூறிய நிலையில், தற்கொலைக்கு தூண்டினார்கள் என்பதில் ஆதாரங்கள் இல்லை.
எனவே தற்கொலைக்குத் தூண்டிய பிரிவில் வழக்குப் பதிவு செய்தது தவறு” என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
ஜெ.பிரகாஷ்
கள்ளக்குறிச்சியில் 281 சவரன் கொள்ளை: வயலில் சிதறிகிடந்த நகைகள்!