ஸ்ரீமதி மரண விசாரணை அறிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு!

Published On:

| By Kalai

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி இறந்த வழக்கில் விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீமதி தந்தை வழக்கு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை மாதம் உயிரிழந்தார்.

சாவில் சந்தேகம் இருப்பதாகக் பெற்றோர் புகார் தெரிவித்த நிலையில் இந்த விவகாரம் பூதாகரமாகி சம்மந்தப்பட்ட பள்ளி அடித்து நொறுக்கப்பட்டது. பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. தங்கள் மகளின் மரணத்தில் நியாயமான முறையில் விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

கவுன்சிலிங் வழங்க புதிய திட்டம்

இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு இன்று(ஆகஸ்ட் 29) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, சீல் வைக்கப்பட்ட உறையில் 3 அறிக்கைகளை தாக்கல் செய்திருந்தார்.

பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கல்வி காரணமாக மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க,

800 நடமாடும் மருத்துவக்குழுக்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க முதலமைச்சர் ஸ்டாலின் புதிய திட்டம் ஒன்றை கொண்டு வந்திருப்பதாகவும் கூறினார்.

202 பேர் கைது

பள்ளிக் கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு மேற்கொண்டு வரும் விசாரணை குறித்த அறிக்கையில் மாணவி மரணம் தொடர்பாக,

வதந்தி பரப்பிய 53 யூ டியூப் லிங்குகள், 7 டிவிட்டர், 23 பேஸ்புக் முடக்கப்பட்டுள்ளதாகவும், 202 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிவசங்கர், ஜிப்மர் மருத்துவமனையில் ஆய்வறிக்கையை வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

சிபிசிஐடிக்கு உத்தரவு

இதற்கு ஆட்சேபணை தெரிவித்த அரசு குற்றவியல் வழக்கறிஞர், விசாரணை சரியான கோணத்தில் சென்று கொண்டிருக்கிறது எனவும் மாணவியின் தாய் முதலமைச்சரை சந்தித்து பேசிய பிறகு அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து ஜிப்மர் மருத்துவமனையின் ஆய்வறிக்கையை வழங்க மறுத்த நீதிபதி, கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் சிபிசிஐடி விரைந்து விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டதுடன், மாணவர்களுக்கு உளவியல் கவுன்சிலிங் வழங்கும் புதிய திட்டம் கொண்டு வந்த அரசுக்கு பாராட்டும் தெரிவித்தார்.

இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கலை.ரா

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share