கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியைகள் இன்று (ஆகஸ்ட் 31) ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் மற்றும் வேதியியல் ஆசிரியர் ஹரிப்ரியா, கணித ஆசிரியர் கிருத்திகா ஆகிய 5 பேரையும் ஆகஸ்ட் 17ம் தேதி கைது செய்த போலீஸார், கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
அவர்களுக்கு விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் 4 முறை ஜாமீன் வழங்க மறுத்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தனர்.
அதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 26ம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
அதன்பிறகு, ஆகஸ்ட் 29ம் தேதி அவர்களுக்கான நிபந்தனைகள் என்னவென்பதை நீதிபதி இளந்திரையன் தெரிவித்திருந்தார்.
அதில் கைதான பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோர் மதுரையில் தங்கியிருந்து, 4 வாரங்களுக்கு தல்லாபுரம் காவல் நிலையத்தில் தினமும் காலையும் மாலையும் கையெழுத்திட வேண்டும்.
இரண்டு ஆசிரியர்களும் சேலத்தில் தங்கியிருந்து 4 வாரங்களுக்கு செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் தினமும் காலையும் மாலையும் கையெழுத்திட வேண்டும்.
பின்னர் 4 வாரங்களுக்கு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சிபிசிஐடி போலீசார் முன் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். விசாரணைக்கு தேவைப்படும் போது ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 31) சேலம் மத்திய சிறையில் இருந்து கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதில் பள்ளி தாளாளர், முதல்வர் ஆகியோர் சேலம் மத்திய சிறைச்சாலையில் இருந்தும், பள்ளி செயலாளர் மற்றும் 2 ஆசிரியைகள் பெண்கள் தனி சிறையிலிருந்தும் இன்று விடுவிக்கப்பட்டனர்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவின்படி, பள்ளி நிர்வாகிகள் மதுரைக்கும், ஆசிரியைகள் சேலத்துக்கும் சென்றனர்.
ஜெ.பிரகாஷ்
கள்ளக்குறிச்சி கலவரம்: சேதமடைந்த பொருட்களின் மதிப்பு என்ன?