கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் ஜாமீன்: நீதிமன்றத்திடம் 70 வழக்கறிஞர்கள் கோரிக்கை!
கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை உயர் நீதிமன்றமே தாமாக முன்வந்து ரத்து செய்யவேண்டும் என்று முறையிடப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் பள்ளியின் தாளாளர்,செயலாளர், முதல்வர், மற்றும் இரண்டு ஆசிரியைகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பின்னர் 5 பேருக்கும் ஆகஸ்ட் 26 ம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார்.
பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாய் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு இன்னும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
இந்தநிலையில் கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கியதை, ரத்து செய்ய வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி,மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் வழக்கறிஞர் ரத்தினம் தலைமையில் 70 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கையெழுத்திட்டு தலைமை நீதிபதியிடம் கடிதம் அளித்துள்ளனர்.
அந்த கடிதத்தில், வழக்கின் விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கியது ஏற்கத்தக்கது அல்ல.
மேலும் மாணவி தற்கொலை தான் செய்து கொண்டார் என்று நீதிபதி தனது விரிவான உத்தரவில் தெரிவித்துள்ளார். விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் நீதிபதி தெரிவித்துள்ள இந்த உத்தரவு உச்சநீதிமன்றத்தின் சட்ட விதிகளை மீறிய செயலாகவே உள்ளது என்று வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த கோரிக்கையை வேறொரு நாளில் முறையிடுமாறு வழக்கறிஞர் ரத்தினத்துக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கலை.ரா
தங்கம் விலை குறைந்தது: எவ்வளவு தெரியுமா?