Kallakurichi : Ruined families of laborers! A visionary plan is needed!

கள்ளக்குறிச்சி… சிதைந்த கூலித் தொழிலாளிகளின் குடும்பங்கள்! தேவை தொலைநோக்குத் திட்டம்!

தமிழகம்

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் மரண ஓலங்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. ஜூன் 19, 20 தேதிகளில் கள்ளச்சாராயம் குடித்தவர்களின் மரண எண்ணிக்கை 47 ஆக உயர்ந்திருக்கிறது.

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாபுரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்ற மூட்டை தூக்கும் தொழிலாளி இன்று (ஜூன் 21) அதிகாலை மரணம் அடைந்திருக்கிறார். மொத்தம் 47 பேர் இறந்துவிட்ட நிலையில், கருணாபுரம் பகுதியில் மட்டுமே 37 பேர் இறந்தனர்.

கள்ளக்குறிச்சி ஒரு சிறிய பரப்பு கொண்ட நகரம்தான். அந்த நகரத்துக்குள் நீதிமன்றம், காவல்நிலையம், வருவாய் அலுவலகங்கள் கொண்ட பரபரப்பான பகுதிக்குள்தான் கன்னுக்குட்டி கோவிந்தராஜின் சாராய விற்பனையும் நடந்து வந்திருக்கிறது.

கருணாபுரம் என்பது பட்டியல் சமுதாய மக்களும், மலைவாழ் மக்களும் வாழும் பகுதியாக அறியப்படுகிறது. மின்னம்பலம் சார்பில் கருணாபுரம் பகுதிக்குச் சென்றபோது ஒவ்வொரு தெருவிலும் மரண ஓலங்கள். சாமியானா பந்தல்கள் போடப்பட்டு, வரிசையாக உடல்கள் குளிர்பதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒரே தெருவில் காட்டு நாயக்கர் எனப்படும் மலைவாழ் சமுதாயத்தைச் சேர்ந்த பத்து பேர் கள்ளச்சாராயம் குடித்து பிணமாகிவிட்டது கொடுமையிலும் கொடுமை.

சுழண்டு சுழண்டு துடிச்சாரு!

தனது கணவரின் தம்பியான கந்தன் உடலருகே சோகத்தோடு அமர்ந்திருந்த செல்வியிடம் பேசினோம்.


“நான் அவரது அண்ணி. நேத்து காலையில 6 மணி இருக்கும். குடிச்சுட்டு வந்து படுத்தவரு, சுழண்டு சுழண்டு துடிச்சாரு. வாமிட்லாம் எதுவும் வரலை. உடனே ஆஸ்ப்பத்திரிக்கு தூக்கிட்டுப் போயிட்டோம். முந்தா நேத்து ராத்திரியும் குடிச்சிருக்காரு. ரெண்டும் ஒரே சரக்கானு தெரிலைங்க. அங்கயும் குடிச்சுட்டு வந்துடும்… சில நேரம் வீட்ல வச்சும் குடிக்கும். இப்ப இப்படி ஆகிப் போச்சுங்க” என்றார் கண் கலங்க.

ஒரு மாதிரியா இருக்குனு சொன்னாரு!

தந்தை சுப்பிரமணியன் உடலைப் பார்த்துப் பார்த்து அழுதுகொண்டிருந்த லதாவை தேற்றிப் பேசினோம்.

“எங்க அப்பா பக்கத்துல இருக்குற கள்ளக்குறிச்சி காய்கறி மார்க்கெட்லதான் மூட்டை தூக்குற வேலை செய்யுறாரு. முதநாள் ராத்திரியும் சாராயம் சாப்பிட்டிருக்காரு, நேத்து (ஜூன் 19) காலையிலையும் சாப்பிட்டிருக்காரு. காலையில வந்து வீட்ல படுத்தவரு ஒரு மாதிரியா இருக்குனு சொன்னாரு. அன்னிக்கு மதியம் ரெண்டு மணிக்குதான் நாங்க ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போனோம். ஆனா போய் சேர்ந்துட்டாரு” என்றார்.

மார்க்கெட்டுக்குள்ளயே துடிதுடிச்சிருக்காரு!

நம்மிடம் பேசிய கண்ணன் என்பவர் கள்ளச்சாராயத்தால் இறந்துபோன சுரேஷ் என்பவரின் தாய்மாமன்.

அவர், “சுரேஷ் கள்ளக்குறிச்சி காய்கறி மார்க்கெட்லதான் வேலை செய்யுறாரு. ஜூன் 19 ஆம் தேதி காலையில 4 மணிக்கெல்லாம் சாப்பிட்டிருக்காரு. அஞ்சு, அஞ்சரைக்கல்லாம் காய்கறி மார்க்கெட்டுக்குள்ளயே டீ கடை பக்கத்துல துடிதுடிச்சிருக்காரு. அங்க காய்கறி மார்க்கெட்ல வேலை பாத்தவங்க இவரைத் தூக்கி 108 ஐ கூப்பிட்டு ஜி.ஹெச்ல அட்மிட் பண்ணியிருக்காங்க. அங்க போகும்போது அன்கான்சியசாதான் போயிருக்காரு. டாக்டர்ஸ் பாத்துட்டு, முடிஞ்சவரைக்கும் காப்பாத்த முயற்சி பண்ணோம். ஆனா பண்ண முடியலைனு சொல்லிட்டாங்க. ஜூன் 19 ஆம் தேதி காலையில 6.10 மணிக்கே அவர் இறந்துட்டாரு.

எங்களுக்கு தகவல் தெரிஞ்சு ஆஸ்பத்திரிக்கு போகும்போது காலையில எட்டு மணி. நாங்க போய் சொன்ன பிறகுதான் இவர் பேரு சுரேஷ்னே அவங்களுக்குத் தெரியும். ஜி.ஹெச்.ல இருந்த எஸ்.ஐ. எங்கக்கிட்ட, ‘அவர் பேரே தெரியலங்க. மார்ச்சுவரிக்கு கொண்டுபோயிட்டோம். நீங்க ஸ்டேஷனுக்கு போய் பாருங்க. அங்கைருந்து எழுதி வாங்கிட்டு வாங்கனு சொன்னாங்க. அப்படித்தான் நாங்க பாடியையே வாங்கிட்டு வந்தோம்” என்றார்.

அம்மா இறந்துட்டாங்க… அப்பா சீரியசா இருக்காரு!

சிதம்பரத்தைச் சேர்ந்த கலா, தனது தாயார் லட்சுமி இறந்த தகவல் கேட்டு கருணாபுரத்துக்கு வந்திருந்தார்.

அவரிடம் பேசியபோது, “எங்க அம்மா லட்சுமி அப்பா ரவி… ரெண்டு பேரும் கூலி வேலைதான் செய்யுறாங்க. கள்ளச்சாராயம் குடிச்சுட்டு அம்மா இறந்தது நேத்து நைட்டுதான் எனக்கு தெரியும். நான் சிதம்பரத்துலேர்ந்து ஓடியாந்தேன். அப்பாவும் சீரியசா இருக்காரு” என்று கண் கலங்கினார்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் கூலித் தொழிலாளிகளே. காய்கறி மார்க்கெட்டில் மூட்டைத் தூக்கும் பாமரத் தொழிலாளர்கள்தான் இந்த கள்ளச்சாராயத்துக்கு பலியாகியிருக்கிறார்கள். அவர்களது குடும்பங்கள் நிர்கதியாய் நிற்கின்றன.

ஒரு சில நாளுக்கான பரபரப்பாக இதைப் பார்க்காமல், கள்ளச்சாராய உயிரிழப்புகளால் அனாதையாக நிற்கும் குழந்தைகள், பெண்களுக்கு அரசு தொலை நோக்கு சிந்தனையோடு நீடித்த உதவிகளை செய்ய வேண்டும் என்பதையே கள்ளக்குறிச்சி கருணாபுரத்தின் கண்ணீர் ஓலங்கள் கோரிக்கையாக வைக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– வணங்காமுடி

Share Market: வார இறுதி நாள்… எந்த பங்குகள் உயரும்?

கோலி சாதனையை சமன் செய்து வரலாறு படைத்த சூர்யகுமார்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0