கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக காவல்துறை மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைப்பெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சரும் பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சருமான எ.வ.வேலு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கனியமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்விற்கு பிறகு மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்குவதற்கு வருவாய் துறையுடன் சேர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று (ஜூலை 19) சென்னை தலைமைச் செயலகத்தில் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் அன்பில் மகேஷ், எ.வ.வேலு, டிஜிபி சைலேந்திர பாபு, உளவுத் துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், பள்ளிக்கல்வி துறை செயலாளர் காகர்லா உஷா உள்பட உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக ஆலோசனை மேற்கொண்டார். மாணவி இறந்து சுமார் ஒரு வாரம் ஆகும் நிலையில் இன்று ஆலோசனை செய்தார்.
முதற்கட்டமாக கலவரத்தின் பின்னணி குறித்தும், கலவரத்தில் ஈடுபட்டவர்கள் எத்தனை பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் முதல்வர் கேட்டறிந்தார்.
அடுத்தபடியாக அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் நிலை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. போராட்டக்காரர்களால் மாணவர்களின் சான்றிதழ்கள் தீயிட்டு எரிக்கப்பட்டது. இதனால் அவர்களது வாழ்க்கை கேள்விக்குறியானதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டினார்கள்.
எனவே மாணவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு வருவாய் துறை மூலம் மாற்று சான்றிதழ் வழங்குவதற்கான ஏற்பாடு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த பள்ளியை எப்போது திறப்பது என்றும் மாணவர்களை வேறு பள்ளியில் மாற்றுவதா அல்லது அதே பள்ளியில் கல்வியை தொடர்வதா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மோனிஷா