மாதவரம் To மடுக்கரை To கள்ளக்குறிச்சி… மெத்தனால் வந்த ரூட்!  சின்னத்துரை கக்கிய ஷாக்! 

Published On:

| By Aara

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயத்தை அருந்தியதால்  50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை தொடர்ந்துகொண்டிருக்கிறது.

சாராய வியாபாரிகள், சப்ளையர்கள் அடுத்தடுத்து கைதாகி வருகிறார்கள். கைது வெளியே காட்டப்படாமல் சில ரகசிய விசாரணைகளும் நடந்து வருகின்றன.

இன்று (ஜூன் 21)  பிற்பகல் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், எஸ்பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்தை காணொலியில் கூட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்… “அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பாக வட மாவட்டங்களில் கள்ளச்சாராய நெட்வொர்க்கை முழுமையாக அகற்ற உத்தரவிட்டிருக்கிறார். மாவட்டங்களில் இதற்கு எதிராக எந்த அரசியல் சக்தி இருந்தாலும் கவலைப்பட வேண்டாம்” என்றும் கூறியிருக்கிறார் முதல்வர்.

இதற்கிடையே கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் உயிர் குடித்த கள்ளச்சாராயத்தை சப்ளை செய்தது யார் என்ற விசாரணை பற்றி காவல் துறை வட்டாரத்தில் விசாரித்தோம்.

“கல்வராயன் மலையில் காய்ச்சி விற்கப்படும் சாராயத்தை கருணாபுரத்தைச் சேர்ந்த கன்னுக்குட்டி கோவிந்தராஜ் போன்ற சில்லறை வியாபாரிகளுக்கு சின்னத்துரை,  ஜோசப் ராஜ் ஆகியோர் சப்ளை செய்தனர். அதிலும் குறிப்பாக இந்த சம்பவத்தில் சின்னத்துரையின் சரக்குதான் முக்கியப் பங்கு வகித்திருப்பது தெரிந்தது.

இவர்களில் சின்னத்துரையின் புகைப்படத்தை  கடலூர் விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம் என அக்கம்பக்க  மாவட்ட போலீசாரின் வாட்ஸ் அப் க்ரூப்புகளில் பகிர்ந்து தேடச் சொன்னார்கள். இந்த மாவட்டங்களிலுள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும்  போட்டோக்கள் சென்றன.

அதையடுத்து வாகன சோதனைகளின் போது  சின்னத்துரையை தேடினர் போலீஸார். முந்தாநாள் (ஜூன் 19) இரவு பண்ருட்டி -வடலூர் இடையிலான கும்பகோணம் சாலையில் கொளஞ்சிக் குப்பம் அருகே கடலூர் மாவட்ட போலீசார் வாகன சோதனையை  நடத்திக் கொண்டிருந்தனர்.

அனைத்து டூவீலர்களையும், காரையும் மறித்து சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போதுதான் டூவீலரில் வந்த சின்னதுரை பிடிபட்டார். சின்னதுரையை பிடித்த போலீஸார் கடலூர் மாவட்ட எஸ்.பி. ராஜாராமுக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர்.

உடனடியாக ஒரு ரகசிய இடத்துக்கு கொண்டு செல்லப்பட்ட சின்னத்துரையை கடலூர் மாவட்ட எஸ்பி. ராஜாராம் தன் பாணியில் விசாரித்திருக்கிறார்.

அந்த விசாரணையில்தான் சின்னத்துரை தான் எங்கிருந்து சரக்கு வாங்கினேன் என்பதை கொட்டியிருக்கிறார்.

‘சமீப மாதங்களாக மலை சாராயம்  சப்ளை குறைய  தொடங்கியது. இதனால் எங்கள்  கஸ்டமர்கள் விட்டுப் போய்விடக் கூடாது, அந்த கேப்பில் புது வியாபாரிகள் நுழைந்துவிடக்கூடாது என்று முடிவெடுத்த நான் வேறு இடங்களில் இருந்து சரக்கு வாங்க முடிவு செய்தேன்.

அப்படித்தான் புதுச்சேரியில் இருக்கும் மடுக்கரையில் பிரபல வியாபாரியான சாகுல் ஹமீது என்பவரின் தொடர்பு கிடைத்தது.

சாகுல் ஹமீதுவை தேடி புதுச்சேரி மடுக்கரைக்கு போனேன். ஒரு காலத்தில் தமிழ்நாட்டுக்கே சரக்கு சப்ளை செய்தது மடுக்கரைதான். அங்கே சாகுல் ஹமீதுவிடம்  கள்ளக்குறிச்சிக்கு சரக்கு வேண்டும் என கேட்டேன்.

ஆனால், சாகுல் ஹமீது, ‘எனக்கு 60 வயசுக்கு மேல ஆயிடுச்சுய்யா… நான் இந்தத் தொழிலையே விட்டுட்டேன்.  பக்கத்துல ஒரு சின்னப் பையன் இருக்கான். மாதேஷ்னு பேரு. நல்ல வீரியமான சரக்கா கொடுப்பான். அவன்கிட்ட போய் கேளு’ என்று சொல்ல மாதேஷிடம் அனுப்பி வைத்தார்.

அதன் பிறகுதான் நான் மாதேஷை சந்தித்தேன். 19 வயதுதான் ஆகிறது மாதேஷுக்கு. கேட்டரிங் படித்திருக்கிறான். நான் முதலில் நம்பவே இல்லை. ஆனால் அவன் தான், ‘நம்ம சரக்கு ரொம்ப வீரியமான சரக்கு. கெமிக்கல்லாம் மெட்ராஸ்லேர்ந்து வாங்கியாரேன்’ என்று சொன்னான்.

சென்னை மாதவரத்தில் ஒரு ஃபேக்டரி இருக்கிறது. அங்கிருந்து மெத்தனால் வரவழைத்து அதை மடுக்கரையிலேயே வைத்து சாராயமாக கன்வர்ட் செய்வான் மாதேஷ். இந்த சின்ன வயதிலேயே பக்காவாக மிக்ஸிங் செய்வான்.   இப்படித்தான் புதுச்சேரியில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு மாதேஷின் சரக்கு வாங்க ஆரம்பித்தேன்’ என்று  கடலூர் எஸ்பி யின் விசாரணையில் அனைத்தையும் கொட்டியிருக்கிறார் சின்னத்துரை.

இதையடுத்து  கடலூர் எஸ்பி ராஜாராம் இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீஸாருக்கு தகவல் கொடுக்க…அவர்கள் சின்னத்துரையை டேக் ஓவர் செய்துகொண்டார்கள்.

சின்னத்துரையிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில்  பழைய வியாபாரி சாகுல் ஹமீதுவையும்,  மாதேஷையும் தூக்கியிருக்கிறார்கள். மெத்தனால் சப்ளை செய்த மாதவரம் ஃபேக்டரி எது? எந்தெந்த வெளிமாநிலங்களில் இருந்து சரக்கு வருகிறது, இதேபோல இன்னும் எங்கெல்லாம் மெத்தனால் சப்ளை ஆகிறது என்ற விசாரணை தீவிரமாகியிருக்கிறது” என்கிறார்கள் காவல்துறை வட்டாரங்களில்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த இந்த கள்ளச்சாராய கொடூரத்தின் கருவை கடலூர் போலீசார் பிடித்திருக்கிறார்கள். இதே ஒருங்கிணைப்போடு அடுத்தடுத்த நகர்வுகளையும் தீவிரமாக்கியிருக்கிறார்கள் போலீஸார்.

-வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கள்ளச்சாராய விற்பனை… அண்ணாமலை புகார்… கள்ளக்குறிச்சி முன்னாள் எஸ்.பி மறுப்பு!

200 பெண்களுக்கு பிங்க் ஆட்டோ: அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share