கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 3) அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் கள்ளச்சாராய மரண வழக்கை சிபிசிஐடியிடமிருந்து சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு இன்று (ஜூலை 3) பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.
அதில், “கள்ளச்சாராய மரணம் தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் மாவட்ட ஆட்சியர் கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு நேரில் சென்று நடவடிக்கை எடுத்தார்.
மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சம்பவம் தொடர்பாக வருவாய்த் துறை உடனடியாக விசாரணை நடத்தவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை வழங்கப்பட்டது. அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், உதயநிதி ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து நிவாரண உதவிகளை வழங்கினர்.
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் நிவாரணமும், சிகிச்சை பெறுவதற்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமும் வழங்கப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி காவல்துறை மூன்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், மதுவிலக்கு ஏடிஜிபி ஆகிய அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட 9 காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையத்திடம் கள்ளச்சாராயத்தை தடுக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அறிக்கை கேட்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், “இதுவரை சிபிசிஐடி காவல்துறை 132 சாட்சிகளிடம் விசாரித்துள்ளது. அவர்கள் அளித்த வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிபிசிஐடியின் 6 குழுக்கள் விரிவாகவும் துரிதமாகவும் வழக்கை விசாரித்து வருகிறது.
தமிழக டிஜிபி தலைமையில் அனைத்து உயர் காவல்துறை அதிகாரிகளும் தொடர்ந்து விசாரணையை கண்காணித்து வருகின்றனர்.
கடந்தாண்டு மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் நடைபெற்ற கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக சிபிசிஐடி சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக விசாரணை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்தது.
மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு சம்பவத்தில் 99 சதவீதம் மெத்தனால் இருந்தது கண்டறியப்பட்டது. தற்போது கள்ளக்குறிச்சியில் கைப்பற்றிய கள்ளச்சாராயத்தில் 8.6 சதவிகிதம் முதல் 29.7 சதவிகிதம் வரை மெத்தனால் கலந்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கள்ளச்சாராய புகார்களுக்காக மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு வாட்ஸ் அப் குழுக்கள் வழங்கப்பட்டுள்ளன.
தொழிற்சாலைகளுக்கு வழங்கி வரும் மெத்தனால் கண்காணிக்கபடுகிறது. கள்ளச்சாராயத்தை ஒழிக்க திடீர் சோதனைகள் நடத்தப்படுகிறது.
கள்ளச்சாராய குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதிக்க கோரிய சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கைகளை சபாநாயகர் ஏற்கவில்லை. தற்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது.
மாநில காவல் துறை விசாரித்து வரும் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற அவசியம் இல்லை. சில அரிதான அல்லது விசாரணையில் முன்னேற்றம் இல்லாத வழக்குகளை மட்டுமே சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோர முடியும். இந்த வழக்கில் இதுவரை 10க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தில் புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. கள்ளச்சாராய குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தில் ஜாமீன் வழங்குவதற்கு கடுமையான நிபந்தனைகள் கொண்டுவரப்பட்டுள்ளது” என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் புதிய சட்டம் அமலுக்கு வரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் முன் தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜரானார்.
அவர், வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூலை 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நீட் எதிர்ப்பு…முழு அறிக்கை இல்லாமல் எதற்கு இந்த நாடகம் : திமுகவுக்கு அண்ணாமலை கேள்வி!
ராகுல் காந்தியின் கூற்றை எதிரொலித்த விஜய் : செல்வப்பெருந்தகை