கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை இன்று (ஜூலை 1)சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த மாதம் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் குடித்த நிலையில் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 65 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுதொடர்பான வழக்கை சிபிசிஐடி வசம் தமிழ்நாடு அரசு ஒப்படைத்த நிலையில், குற்றவாளிகளாக 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனினும் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி அதிமுக மற்றும் பாமக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சியின் நேர்காணலில் பங்கேற்ற வழக்கறிஞர் தமிழ்மணி, ”கள்ளக்குறிச்சி கல்வராயன் மலை பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு தமிழ்நாடு அரசு அடிப்படை வசதிகளையும், எந்தவித வேலைவாய்ப்பையும் செய்து தரவில்லை. அதனால் தான் அப்பகுதி மக்கள் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் சி. குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
மேலும், கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள மக்களின் சமூக பொருளாதார நிலை காரணமாக இந்த விவகாரத்தில் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும்,
’கள்ளச்சாராய மரணம் குறித்து தமிழ்நாடு தலைமைச்செயலாளர், மத்திய, மாநில பழங்குடியினத்துறை செயலாளர்கள், தமிழ்நாடு டிஜிபி, கள்ளக்குறிச்சி ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு நீதிபதிகள் அமர்வு வழக்கை ஒத்திவைத்தது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
நாடாளுமன்றம் : இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்!
ஆர்சிபி அணிக்காக புதிய பொறுப்பை ஏற்றார் தினேஷ் கார்த்திக்