கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவியின் உடல் நேற்று(ஜூலை 21) மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் மறுப்பதாக தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
இன்று(ஜூலை 22) இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், நாளை(ஜூலை 23) காலை 11 மணிக்குள் உடலை பெற்றுக்கொள்ள வேண்டும் என பெற்றோருக்கு உத்தரவிட்டார். இது தொடர்பாக மதியம் 12 மணிக்குள் பெற்றோர் முடிவை தெரிவிக்க வேண்டும் எனவும் உடலை பெற்றுக்கொள்ளாவிட்டால் காவல்துறை சட்டப்படி இறுதிச்சடங்கை செய்யலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், மகளின் உடலை நாளை ( ஜூலை 22) பெற்றுக்கொள்வதாக மாணவியின் பெற்றோர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து நாளை காலை 7 மணிக்குள் உடலை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அன்றைய தினமே இறுதிச்சடங்கை முடிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.