அந்த 7 பேருக்கும் மரண தண்டனைதான் ஸ்ரீமதிக்கான நீதி: கதறும் தந்தை

தமிழகம்

மாணவி ஸ்ரீமதியின் உடலை அடக்கம் செய்த பிறகு அவரின் தந்தை தனது மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.

கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் பள்ளியில் படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை 13 ஆம் தேதி அவர் படித்து வந்த பள்ளி விடுதியில் மர்மமான முறையில் மரணமடைந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள். அந்த போராட்டமானது கலவரமாக மாறியது. அதன் பிறகு நீதிமன்ற விசாரணை, தீர்ப்பு, வழக்கு தள்ளுபடி இரு முறை உடற்கூறாய்வு என பல சிக்கல்களுக்கு பிறகு மாணவியின் உடலை பெற்றுக் கொள்வதற்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து இன்று (ஜூலை 23) காலை 7 மணிக்கு மாணவி ஸ்ரீமதியின் உடல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இருந்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் சுமார் இரண்டு மணி நேரம் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கண்ணீர் அஞ்சலிக்குப் பிறகு மாணவியின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

அதன் பிறகு மாணவியின் தந்தை ராமலிங்கம் தன் மகளின் மரணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார் .

”என் மகளின் மரணத்திற்கு எனக்கு நீதி தான் தேவை. பொருளோ, பணமோ எதுவும் தேவை இல்லை. இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. அவர்கள் முறையான விசாரணையை மேற்கொண்டு நியாயமான தீர்ப்பு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. பள்ளி விடுதியை அனுமதியின்றி நடத்தியதற்கு அவர்களை மூன்று ஆண்டுகள் சிறையில் அடைக்கலாம், அதற்கு எந்த ஒரு அதிகாரமும் தேவையில்லை. மேலும் தமிழக அரசு தான் நல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், எங்களால் முடிந்த வரை நாங்கள் போராடிப் பார்த்தோம், எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

இதுவரை எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. என் மகளை நான் பெற்று, வளர்த்து இப்போது எதற்கு புதைக்கின்றேன் என்று எனக்கு தெரியவில்லை. என் மகளுக்கு நீதி வேண்டும் என்றால் அவர்களுக்கு மரண தண்டனை வேண்டும். இதை தவிர வேறு எதையும் நான் எதிர்பார்க்கவில்லை. இதில் சம்பந்தபட்டவர்கள் அந்த பள்ளியில் இருக்கும் 7 பேர் தான். அவர்களை ஏற்கனவே போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

இன்று இறுதி ஊர்வலத்தில் போலீசார் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். பொதுமக்களுக்கு எந்த சேதாரமும் இல்லாமல் பக்கபலமாக இருந்தார்கள் அவர்களுக்கு என் நன்றிகள். என் மகளை நான் இன்று புதைக்கவில்லை விதைத்திருக்கிறேன். அந்த விதை மரமாக வளர்ந்து வந்து அவர்களது குடும்பத்தை வேரறுக்காமல் விடாது. அதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. என் மகள் மரணித்த போது தமிழக அரசு மந்தமாக தான் இருந்தது. ஆனால் இப்போது வேகமாக செயல்படுகிறது. இதே வேகத்தில் செயல்பட்டால் ஒரு மாதத்தில் கொலையாளியை கண்டுபிடிக்க முடியும்.

நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது, அதனால் தான் நாங்களும் போராடினோம். அதை தவிர வன்முறையில் ஈடுபடவில்லை யாரையும் வன்முறைக்கு ஈடுபடுத்தவும் இல்லை. எனவே கலவரம் தொடர்பாக கைது செய்த மாணவர்களை அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு விடுவிக்க வேண்டும் என்பது எனது கோரிக்கை.

என் மகளுக்கு நடந்த காரியம் இந்தியாவிலேயே வேறு எந்த குழந்தைக்கும் நடக்கக் கூடாது இதுவே முதலும் கடைசியாக இருக்க வேண்டும்” என்று உருக்கமாகப் பேசினார்.

மோனிஷா

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
3

2 thoughts on “அந்த 7 பேருக்கும் மரண தண்டனைதான் ஸ்ரீமதிக்கான நீதி: கதறும் தந்தை

  1. School management close proximity to saffron party and hence this case never see the light of the day. Most unfortunate state government mute spectator for the murder mystery.

  2. பாசிச RSS ஆட்கள் சம்பந்தப்பட்ட குற்றம் என்றால் அக்குற்றத்தின் உண்மை குழி தோண்டி புதைக்கப் படும் அது ஐ ஐ டி மாணவி பாத்திமாவாக இருந்தாலும் சரி கல்லக்குறிச்சி மாணவி ஸ்ரீ மதி ஆக இருந்தாலும் சரி அதிகார வர்க்கம் உண்மையை மூடி மறைக்கவே செய்கிறது. அதிமுக ஆட்சி போல் திமுக இருக்காது என நம்புவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *