கள்ளக்குறிச்சி கனியமூர் பள்ளி கலவர வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட விஜய் என்பவரை சிறையில் அடைத்ததை எதிர்த்து அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியமூரில் உள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் கடந்த ஜூலை 13-ஆம் தேதி, 12-ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ஜூலை 17-ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளியில் கலவரம் வெடித்தது.

இந்த கலவரம் தொடர்பாக 410-க்கும் மேற்பட்டோரைச் சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் 300-க்கும் மேற்பட்டோர் ஜாமீனில் வெளிவந்தனர். இந்த வழக்கில் 13 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட விஜய் என்பவரை விடுதலை செய்ய வலியுறுத்தி அவரது மனைவி தமிழ்ப்பிரியா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் ஜாமீனில் விடுதலையாவதை தடுக்க உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் தனது கணவர் விஜயை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, “தமிழ்ப் பிரியாவின் ஆட்கொணர்வு மனுவுக்கு நான்கு வாரங்களில் தமிழக அரசின் உள்துறை செயலாளர், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர். .
செல்வம்
“மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்” -ஆய்வுக்கு பின் முதலமைச்சர் பேட்டி!