கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் கைதான பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர் மதுரையில் தங்கவும், ஆசிரியைகள் இருவர் சேலத்தில் தங்கவும் நீதிமன்றம் நிபந்தனை விதித்து இருக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் +2 படித்து வந்த மாணவி கடந்த மாதம் 13ஆம் தேதி பள்ளி வளாகத்தில் இறந்து கிடந்தார்.
மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் சந்தேகம் எழுப்பி இருந்த நிலையில் , வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கில் தனியார் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் கிருத்திகா, ஹரிப்ரியா உள்ளிட்ட 5 பேரையும் கடந்த 17ஆம் தேதி போலீசார் கைது செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
அவர்களுக்கு விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் 4 முறை ஜாமீன் வழங்க மறுத்த நிலையில் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமையன்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இன்று (ஆகஸ்ட் 29) நீதிபதி இளந்திரையன் அந்த 5 பேருக்கான நிபந்தனைகள் என்ன என்பதை தெரிவித்தார்.
அதில், “பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.
மாணவி நன்கு படிக்கவேண்டும் என்று கூறியதற்காக ஆசிரியர்கள் சிறைவாசம் அனுபவிப்பது துரதிஷ்டவசமானது.
படிப்பில் சிக்கல்களை சந்தித்ததால் மாணவி தற்கொலை செய்துகொண்டதற்கு நீதிமன்றம் வருத்தத்தை பதிவு செய்கிறது.
எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கக்கூடாது” என்று நீதிபதி இளந்திரையன் தெரிவித்தார்.
மேலும் ஆசிரியைகள் கிருத்திகா, ஹரிப்பிரியா 4 வாரங்கள் சேலத்தில் தங்கியிருந்து செவ்வாய்பேட்டை காவல்நிலையத்தில் தினமும் காலை, மாலை கையெழுத்திடவேண்டும் என்றும்,
பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் ஆகியோர் மதுரையில் தங்கியிருந்து 4 வாரங்களுக்கு தல்லாபுரம் காவல்நிலையத்தில் காலை, மாலை இரண்டு நேரங்களில் கையெழுத்திடவும்,
அதன்பின் 4 வாரங்களுக்கு சிபிசிஐடி முன் ஆஜராகி காலை மற்றும் மாலை நேரத்தில் கையெழுத்திடவேண்டும் என்றும்,
விசாரணைக்கு தேவைப்படும் நேரத்தில் ஆஜராகவேண்டும் என்றும், சாட்சியங்களை கலைக்கக்கூடாது என்ற நிபந்தனைகளை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
கலை.ரா
கள்ளக்குறிச்சி வழக்கில் மேலும் 2 இளைஞர்கள் கைது!
Comments are closed.