சின்னசேலம் பள்ளி மாணவிக்கு நீதிகேட்டு நடந்த போராட்டம் கலவரமாக மாறியிருக்கும் நிலையில் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் இன்று காலை முதலே இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்கள் போலீசார் மீதும் தாக்குதல் நடத்தினர். இதில், பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து அங்குப் பதற்ற நிலை நீடித்து வரும் நிலையில் டிஜிபி சைலேந்திர பாபு ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின், “கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது. மாணவியின் மரணம் குறித்து நடைபெற்று வரும் காவல்துறை விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்.
உள்துறைச் செயலாளரையும், காவல்துறை தலைமை இயக்குநரையும் கள்ளக்குறிச்சிக்குச் செல்ல உத்தரவிட்டுள்ளேன். அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுகிறேன்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
-பிரியா