கலாஷேத்ரா பாலியல் புகாரில் குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் ஹரிபத்மன் திடீரென்று தலைமறைவாகிவிட்டார்.
சென்னை திருவான்மியூரில் இயங்கி வரும் கலாஷேத்ரா நாட்டிய கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது.
இதனடிப்படையில், கலாஷேத்ரா நிர்வாகம் ஒரு குழுவை அமைத்து விசாரணை மேற்கொண்டது. ஆனால் தொடர்ச்சியாக பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக மாணவிகள் சில தினங்களுக்கு முன்பு கல்லூரி வளாகத்தில் பதாகைகளுடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து கலாஷேத்ரா மாணவ, மாணவிகள் மின்னஞ்சல் வாயிலாக மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு முதல்வருக்கு கடிதம் எழுதினர். பின்னர் மாநில மகளிர் ஆணையத் தலைவர் குமாரி கலாஷேத்ராவிற்கு நேரடியாக வந்து விசாரணை நடத்தினார்.
இந்த பாலியல் குற்றங்கள் தொடர்பாக கலாஷேத்ரா பேராசிரியர்கள் ஹரிபத்மன், சஞ்சித்லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகிய 4 பேர் மீது மாணவ, மாணவிகள் புகார் அளித்தனர். இதற்கிடையே கலாஷேத்ராவில் 2015-2019 வரை பயின்ற முன்னாள் மாணவி சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், பேராசிரியர் ஹரிபத்மன் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் ஹரிபத்மன் நாளை (ஏபரல் 3) மதியம் 12 மணிக்குள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று மாநில மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் பேராசிரியர் ஹரிபத்மன் தலைமறைவாகியுள்ளார். முன்னதாக, கலாச்சார நிகழ்ச்சிக்காக மாணவிகளுடன் ஐதராபாத் சென்றிருந்த ஹரி பத்மன் சென்னை திரும்பியதும் வழக்கு விசாரணைக்காக போலீஸில் ஆஜராவேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஐதராபாத் கலாச்சார நிகழ்ச்சிக்காக சென்றிருந்த குழுவினர் சென்னை திரும்பினர். ஆனால், அவர்களுடன் ஹரி பத்மன் சென்னை வராமல் தலைமறைவாகியுள்ளார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தலைமறைவான ஹரி பத்மனை போலீஸார் தீவிரமாக தேடி வருவதாக காவல்துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோனிஷா
அரசு நிறுவனங்கள்: மின்னணு கொள்முதல் கட்டாயம்!
தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி!