பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் ஹரி பத்மன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை கலாஷேத்ரா மாணவிகள் இன்று (மார்ச் 30) உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் உள்ள கலாஷேத்ரா கல்வி நிறுவனத்தில் பேராசிரியர் ஹரி பத்மன் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக சமூக வலைத்தளங்களில் மாணவிகள் குற்றசாட்டுகளை எழுப்பினர்.
இந்த விவகாரம் தேசிய மகளிர் ஆணைய கவனத்துக்கு சென்ற நிலையில் இதுதொடர்பாக டிஜிபி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் இல்லை என்றால் தேசிய மகளிர் ஆணையமே விசாரணையில் இறங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் பாலியல் புகார் தொடர்பாக அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி என கூறப்படும் ஒரு பெண், தனது பெயரை தவறாக பயன்படுத்தி இதுபோன்று பேராசிரியர் மீது பாலியல் புகார் அளித்துள்ளனர். இதுபோன்று எதுவும் நடக்கவில்லை என கூறிருந்தார்.
மாணவி கூறியதன் அடிப்படையில் தேசிய மகளிர் ஆணையம் தமிழக டிஜிபிக்கு வழங்கிய உத்தரவை வாபஸ் பெற்றது. ஆனால் நேற்று (மார்ச் 29) ரகசியமாக தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா, கலாஷேத்ராவில் 3 மணி நேரமாக விசாரணை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து பாலியல் தொல்லை புகார் குறித்து கலாஷேத்ரா முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தேசிய மகளிர் ஆணையமும் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி அடையாறு கலாஷேத்ராவில் பயிலும் மாணவிகள் இன்று (மார்ச் 30 )உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து பெயர் குறிப்பிடாமல் செய்தியாளர்களிடம் பேசிய மாணவிகள், பாலியல் தொல்லை விவரங்களை கூற விடாமல் கலாஷேத்ரா இயக்குனர் ரேவதி மிரட்டும் தொனியில் பேசுகிறார். , கலாஷேத்ரா இயக்குனர் ரேவதி ராமச்சந்திரனே, மாணவிகளை கிண்டல் செய்து அவமானப்படுத்துவார் என்று கூறினர்.
மேலும், பாலியல் தொல்லை குறித்து புகார் அளித்தால் உரிய விசாரணை நடத்தாமல் அலைக்கழிப்பதாகவும், இசை வகுப்பில் மாணவிகளை தரக்குறைவாக பேசிய பேராசிரியர் மீது உடனடியாக கலாஷேத்ரா நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. ஆனால், நடனப் பயிற்சியின் போது மாணவிகளிடம் அத்துமீறிய பேராசிரியர் மீது கலாஷேத்ரா நடவடிக்கை எடுக்க மறுக்கிறது என்றும் மாணவிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், சென்னையில் உள்ள கலாஷேத்ராவுக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி வரை விடுமுறை அளித்தும் விடுதியில் தங்கியுள்ள மாணவிகள் வெளியேறவும் கலாஷேத்ரா கல்லூரி முதல்வர் பாக்கா ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்