”மாணவிகள் விரல்கள் பிடித்து பரத முத்திரை…”: கலாஷேத்ரா ஹரிபத்மனின் முழு வாக்குமூலம்!

தமிழகம்

கேரளா சென்று அங்கே கலாஷேத்ராவின் முன்னாள் மாணவியிடமும், அவரது தாயாரிடமும் விசாரித்து ஸ்டேட்மென்ட் பெற்றுக் கொண்ட போலீஸார்… சென்னை திரும்பியதும் அவர்கள் கொடுத்த தகவல்களின்படி மேலும் சில இந்நாள், முன்னாள் கலாஷேத்ரா மாணவிகளை சந்தித்து விசாரித்தனர்.

இதற்கெல்லாம் பிறகுதான் ஹரிபத்மனை கைது செய்தனர். ஏப்ரல் 3 ஆம் தேதி அதிகாலையில் ஹரிபத்மனை கைது செய்த போலீசார்… அவரை எம்.ஜிஆர். நகர் காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கே அவருக்கு காபி, பொங்கல் வாங்கிக் கொடுத்து, ஃபேன் உள்ள அறையில் நாற்காலியில் அமரவைத்து விசாரணையைத் தொடங்கினர். பெயர், தந்தை பெயர், சொந்த ஊர் என்ற வழக்கமான கேள்விகளுக்கு பதில்களை உடனுக்குடன் சொல்லியிருக்கிறார் ஹரிபத்மன்.

அடுத்து கேரள மாணவி, அவரது தாயார் மற்றும் முன்னாள் மாணவிகளிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சொன்ன தகவல்களின் அடிப்படையில் ஹரிபத்மனை நோக்கி கேள்விகளை வீசினார்கள் போலீஸார்.

’உங்க மேல என்ன புகார் கொடுத்திருக்காங்கனு தெரியுமா?”
’தெரியாது சார்” என்று பதிலளித்தார் ஹரிபத்மன்.


’உங்கக்கிட்ட பரதம் கத்துக்க வந்த மாணவிகள்கிட்ட நீங்க தப்பா நடந்துக்கிட்டீங்கன்னும், செக்ஸ் டார்ச்சர் கொடுத்தீங்கன்னும் புகார் கொடுத்திருக்காங்க. உங்க மாணவிகள்தான் கொடுத்திருக்காங்க” என்று போலீஸார் சொன்னதும்… ஹரிபத்மனின் முகம் இருண்டது.

“சார்…என் மீது அப்பட்டமா வீண் பழி சுமத்தறாங்க சார். நான் அதுபோல எதுவுமே செய்யல சார். என்னை நம்புங்க சார்” என்கிறார் குரல் உடைந்து.

இந்த பதிலுக்குப் பிறகு போலீஸ் கேட்ட அடுத்த கேள்வியில்தான் தொனி மாறியது.
”சரி… பரத நாட்டியம் கத்துக்க வர்ற மாணவிகளோட கை, விரல், இடுப்புல எல்லாம் எதுக்கு கை வைக்கிறே?”
அதாவது ஹரிபத்மனை ஒருமையில் அழைக்கத் தொடங்கினர். போலீஸின் தொனியை உணர்ந்துகொண்ட ஹரிபத்மன்,
“சார் நான் தப்பான எண்ணத்தோட எதையுமே செய்யல சார். பரதத்துல கை விரல்கள் மூலமாக காட்டும் முத்திரை ரொம்ப முக்கியம். அதை தவறாக பண்ணும்போது விரலைத் தொட்டு சரி செய்வேன் சார். வாய் அசைவு, இடுப்பு வளைவு, முதுகு ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு பொசிஷன் ரொம்ப முக்கியம் சார். அதை சில நேரம் கைவைத்துதான் சொல்லித் தரவேண்டிருக்கும். ஆனா அப்படி செய்யும்போது தப்பான எண்ணம் எதுவும் சத்தியமா எனக்கு இருந்ததில்லை சார்…” என்று கண்ணீர் விட்டு அழத் தொடங்கிவிட்டார் ஹரிபத்மன்.
’இவ்வளவு நுணுக்கமா பெண்களுக்கு சொல்லிக் கொடுக்கறதுக்கு பெண் ஆசிரியர்கள் இல்லையா?” என்று கேட்டார் விசாரணை அதிகாரி.
“சார்… நான் இருபது வருஷமா பரதம் கத்துக் கொடுக்குறேன். என்கிட்ட படிச்ச பசங்க பெரிய நிலைமையில புகழ்பெற்ற டான்சர்களா இருக்காங்க. நான் சொல்லிக் கொடுக்கும் அளவுக்கு பெண் ஆசிரியர்களே சொல்லிக் கொடுக்க முடியாது. என் அளவுக்கு அவங்களுக்கு வராது சார்… இதை திமிர்ல சொல்லலை. வித்தை கர்வத்துல சொல்றேன்” என்று விளக்கம் சொல்லியிருக்கிறார் ஹரிபத்மன்.
”இப்படிப்பட்ட பரத வகுப்புகளை அஃபீசியலா சொல்லிக் கொடுக்கறதோட வீட்டுக்கும் எதுக்கு மாணவிகளை வர சொல்லியிருக்க?”
“வெளியூர் ப்ரொக்ராம் இருந்தா அதுக்காக ஸ்பெஷல் ட்ரைனிங் கொடுப்போம். அப்பதான் வீட்டுக்கு வர சொல்லுவேன். அப்ப கூட வீட்ல என் மனைவி, பிள்ளைகள் இருப்பாங்க. அவங்க கூடவும் என் ஸ்டூடண்ட்ஸ் பேசிக்கிட்டிருப்பாங்க. பழகுவாங்க?” என்று பதில் சொல்லியிருக்கிறார் ஹரிபத்மன்.

”அப்படின்னா அந்த வாட்ஸ் அப் மெசேஜுக்கெல்லாம் என்ன பதில்?”

”வாட்ஸ் அப் மெசேஜ் எதையும் நான் தவறான நோக்கில் அனுப்பல சார். என்னை நம்புங்க சார்” என்று தழுதழுத்திருக்கிறார் ஹரிபத்மன்.

கொஞ்சம் இடைவெளி விட்டு அவரிடம், “உன் மேல மாணவிகள் மட்டுமில்ல, பேராசிரியர்களே உன்னைப் பத்தி குறை சொல்லியிருக்காங்களே” என்று கேட்டிருக்கிறார்கள் போலீஸார்.

அதற்கு ஹரிபத்மன், “சார்… கலாஷேத்ரா நிர்வாகத்தில பேராசிரியர்களுக்குள் அதிகார மோதல் நடந்துக்கிட்டிருக்கு சார்… இயக்குனர் பதவிய யார் பிடிக்கிறதுன்னு பெரிய போட்டியே நடக்குது. அதில் என்னை பலிகடா ஆக்கப் பாக்குறாங்க சார்” என்று சொல்லியிருக்கிறார் ஹரிபத்மன்.


இந்த விசாரணைக்குப் பிறகுதான் ஹரிபத்மனை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
எப்ஐஆர் மற்றும் புகார் நகல்கள், ரிமான்ட் ரிப்போர்ட் ( நீதிமன்றக் காவல் அறிக்கை) அதில் ஹரிபத்மன் வாக்குமூலம் பத்துக்கும் மேற்பட்ட சாட்சிகள் சொன்ன வாக்குமூலம்,ஹரிபத்மன் வாக்குமூலம் கொடுத்தது உண்மை என்று இரண்டு சாட்சிகள் கையெழுத்து, கலாஷேத்ரா வளாகத்தின் வரைபடம், அதில் ஹரிபத்மனின் வீடு, ருக்மணி தேவி நுண்கலை கல்லூரி ஆகியவற்றின் வரைபடங்கள் உள்ளிட்ட அனைத்தையும் போலீசார் நீதிபதியிடம் சமர்ப்பித்து நீதிமன்றக் காவலில் ஹரிபத்மன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
போலீஸார் சேகரித்து வரும் மற்ற ஆதாரங்கள் அடுத்த விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வாய்ப்பிருக்கிறது.

-வணங்காமுடி

மோடி, அமித்ஷா நட்டா: தம்பிதுரையின் அடுத்தடுத்த சந்திப்புகள்!

புற்று நோயுடன் விளையாடிய யுவராஜ்: ஹர்பஜன் உருக்கம்!

+1
1
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *