பாலியல் புகார் வழக்கில் கைது செய்யப்பட்ட கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர் ஹரிபத்மனின் ஜாமின் மனுவை சைதாப்பேட்டை நீதிமன்றம் இன்று(ஏப்ரல் 11) தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகள் சிலர் பேராசிரியர் ஹரிபத்மன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறினர். இதையடுத்து பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிபத்மனை கைது செய்தனர்.
அவருடன் குற்றச்சாட்டுக்கு உள்ளான மேலும் 3 பேராசிரியர்களையும் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.
கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு கல்லூரி பேராசிரியரே பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தனது விசாரணையை இன்று தொடங்கியது. தொடர்ந்து நாளையும் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
இதற்கிடையே பேராசிரியர் ஹரிபத்மன் சார்பில் ஜாமின் கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு இன்று நீதிபதி மோகனாம்பாளிடம் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு, மாநில மகளிர் ஆணையம் மற்றும் மாதர் சங்கம் தரப்பிலும் ஜாமின் வழங்கக்கூடாது என்று வாதிடப்பட்டது.
அதே வேளையில் ஹரிபத்மன் தரப்பு வழக்கறிஞர் இதுபோன்ற வழக்குகளில் முன்பு ஜாமின் வழங்கப்பட்ட வழக்குகளை பட்டியலிட்டு வாதாடினார்.
கடந்த 2 நாட்களாக தொடர்ந்து 4 வழக்கறிஞர்களும் வாதம் செய்த நிலையில், ஹரிபத்மன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
கிறிஸ்டோபர் ஜெமா
’ஒரு டிக்கெட் 7,000 ரூபாயா?’: கொந்தளிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!
தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு வித்திட்ட முதல்வருக்கு நன்றி: பாரதிராஜா