குமரியில் தொடங்கப்பட்ட கலைஞரின் ’முத்தமிழ்த் தேர்’ அலங்கார ஊர்தி’ தமிழ்நாடு முழுவதும் டிசம்பர் 4ஆம் தேதி வரை பயணிக்கவுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு எழுத்தாளர் கலைஞர் குழுவின் சார்பில் அமைக்கப்பட்ட முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தியினை இன்று (04.11.2023) கன்னியாகுமரி, காந்திமண்டபம் அருகில் உள்ள முக்கோணப்பூங்காவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அகியோர் முரசு கொட்டி துவக்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் கலைஞர் குழுவின் தலைவரும் அமைச்சருமான பெரியகருப்பன் பேசுகையில், “எழுத்தாளர்-கலைஞர்” குழு, படைப்புலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ்நாட்டிற்கு ஆற்றிய அரும்பணிகளில் அவரது பரிமாணங்களைப் போற்றும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை செயல்படுத்திவருகிறது.
அந்தவகையில், கலைஞரின் புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் இன்றைய இளம் தலைமுறையினருக்கு கலைஞரின் பன்முகத்தன்மையினை எடுத்து செல்லும் வகையில், எழுத்தாளர் – கலைஞர் குழுவின் மூலம் அவரது புகழ்பாடும் “முத்தமிழ்த்தேர்” அலங்கார ஊர்தி தயார் செய்து இன்று (4.11.2023) துவக்கிவைக்கப்பட்டது,
இந்த வாகனமானது “எழுத்தே எனது மூச்சு, எழுதுவதே எனது தினப்பழக்கம்” என்று முழங்கிய கலைஞர் பயன்படுத்திய பேனா வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் வெளிப்புறத்தில் கலைஞரின் பன்முகத்தன்மையினை விளக்கும் புகைப்படங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கலைஞர் சிறப்புகளை விளக்கும் குறும்படமும் தொடர்ந்து திரையிடும் வகையில் ஒளித்திரையும் (LED WALL) அமைக்கப்பட்டுள்ளது.
பேனா வடிவிலான இந்த வாகனத்தின் பின்புறம் இயந்திரத்தினால் திறந்து மூடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலங்கார ஊர்தியினை பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட அனைவரும் சென்று பார்வையிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
வாகனத்தின் உள்ளே, கலைஞரின் கோபாலபுர இல்ல உள் அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. உள்ளே அஞ்சுகம் அம்மாள் உருவச்சிலையும் அதன் அருகில் கலைஞர் இருக்கையில் அமர்ந்திருப்பது போன்ற உருவச்சிலையும், அவர் பயன்படுத்திய நூலகத்தின் மாதிரி வடிவமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் அருகில் நின்று பொதுமக்கள் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், கலைஞரின் எழுத்துகளால் உயிர்ப்பெற்ற கவிதை, கட்டுரை, புதினங்கள். காப்பியங்கள் போன்றவற்றை கைப்பேசி வாயிலாக இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் QR Code Scan வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.
இந்த வாகனம் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் வழியாக வரும் டிசம்பர் 4ஆம் தேதி சென்னைக்கு வரவுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
“பெரியார்தான் அடித்தளம்”: கி.வீரமணிக்கு சோனியா காந்தி கடிதம்!
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் அன்னபாரதி: கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!