கலைஞர் நினைவு பேனா சின்னத்துக்குத் தடைகோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பயன்படுத்திய பேனாவின் மாதிரி வடிவத்தை 137 அடியில் (42 மீட்டர்) பிரமாண்ட சிலையாக சென்னை மெரினா கடலுக்கு நடுவே அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த நினைவு சின்னம் கலைஞர் நினைவிடத்தின் உள்ளே இருந்து கடலின் மேல் 360 மீட்டர் தூரத்தில் அமைக்கப்பட இருக்கிறது.
இந்த பிரம்மாண்ட நினைவுச் சின்னத்துக்கு ‘முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவுச் சின்னம்’ என்று பெயரிடப்பட உள்ளது.
இதற்கு தமிழகத்தில் ஆதரவும் எதிர்ப்பும் இருந்து வரும் நிலையில், இந்த திட்டத்திற்கு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்திருந்தது. இதையடுத்து மத்திய அரசும் இதற்கான முதல் கட்ட அனுமதியை அளித்திருந்தது.
இதற்கிடையே, கலைஞர் பேனா நினைவுச்சின்னம் அமைக்க தடை கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், ’சென்னை நேப்பியர் பாலம் முதல் கோவளம் வரையிலான கடலோரப் பகுதிகள் ஆமைகள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
கட்டுமானங்கள் மேற்கொள்வதால் ஆமைகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதுடன், கடல் வளமும் பாதிக்கப்படும்.
ஆகையால், கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின்படி, நிபுணர் குழுவை அமைத்து விதிகளுக்கு மாறாக கட்டுப்பட்டுள்ள அனைத்து கட்டுமானங்களை அகற்ற உத்தரவிட வேண்டும்’ என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கலைஞர் நினைவு பேனா சின்னத்துக்குத் தடைகோரிய வழக்கு, தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் விசாரிக்கப்பட்டது.
அப்போது, கலைஞர் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மற்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஆகியவை 8 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்ததுடன், வழக்கின் விசாரணையை, 2023ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதிக்கு தள்ளிவைத்தது.
ஜெ.பிரகாஷ்