கலைஞர் நூலக கட்டுமானப் பணிகள் 90 % நிறைவு பெற்றுள்ள நிலையில், பிப்ரவரி மாதம் திறக்க திட்டமிட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் போல மதுரையில் புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறை கட்டிட வளாகத்தில் ரூ. 99 கோடியில் கலைஞர் நினைவு நூலகம் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது.
இந்த கட்டிடம் 2 லட்சத்து 40 ஆயிரம் சதுர அடியில் 7 மாடிகளுடன் அமைகிறது.
கன்னியாகுமரியில் ஆரம்பித்து தென் மாவட்டங்கள் முழுவதும் இருந்து மாணவர்கள், பல்துறை வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் இந்த நூலகம் கட்டப்பட்டு வருகிறது.
8 தளங்களுடன் நவீன வசதிகளுடன் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படுகிறது.
இதில், கட்டடத்திற்கு 99 கோடி ரூபாயும், புத்தகம் வாங்க 10 கோடி ரூபாயும், கணினி வாங்க 5 கோடி ரூபாயும் என மொத்தம் 114 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைப்பெற்று வருகிறது.
அடித்தளத்தில் வாகன நிறுத்துமிடம், தரை தளத்தில் வரவேற்பு அரங்கம், தமிழர் பண்பாடு, அறிவியல் கண்டுபிடிப்புகள் அடங்கிய கலைக்கூடம்,
மாற்றுத்திறனாளிகள் பிரிவு ஆகியவையும், முதல் தளம் முதல் ஆறாம் தளம் வரை இரண்டு லட்சத்திற்கும் மேலான நூல்களுக்கான பிரிவுகளும் அமைகிறது.
அடித்தளம் மற்றும் 7 மாடிகள் கொண்ட இந்த நூலகம் முற்றிலும் குளிரூட்டப்பட்டதாக அமைகிறது.
மூன்று மாடிகள் வரை கண்ணாடிகளால் ஆன முகப்புத் தோற்றம் கொண்டதாக அமையும்.
இந்த நூலகத்தில் இலவச வைபை வசதி, மூன்று நகரும் படிக்கட்டுகள், ஆறு மின் தூக்கிகள் மற்றும் மாடித் தோட்டம் அமைகிறது.
மேலும், சுயமாகப் பரிமாறும் உணவு கூடம், குழந்தைகளுக்கான நிகழ்ச்சி அரங்கு, மாற்றுத்திறனாளிகளுக்காக தரைத் தளத்தில் பிரத்யேக பிரிவு, பார்வையற்றோர், காது கேளாதோருக்கான மின் மற்றும் ஒலி நூல்கள், 100 நான்கு சக்கர வாகனங்கள், 200 இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்த வசதி என மதுரையில் அதிநவீன நூலகம் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அடுத்தடுத்து ஆய்வுகள் செய்து கட்டுமான பணிகளை முடுக்கி விட்டிருந்த நிலையில் தற்போது பணிகள் நிறைவுபெற்றுள்ளன.
இந்த நிலையில், கலைஞர் நூலக கட்டுமான பணிகள் 90 % நிறைவடைந்துள்ள நிலையில், வரும் பிப்ரவரி மாதம் நூலகம் திறக்கப்படலாம் எனவும், தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் சென்று நூலகத்தை திறந்து வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கலை. ரா
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் – வசூல் ரிப்போர்ட்!
மதுவந்தியின் ஏலம் போன வீடு: பொருட்களை மீட்டுத்தர புகார்!