பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தை தமிழக அரசு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.
கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, கலைஞரின் கனவு இல்லம் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
குடிசை வீடுகளில் குடியிருப்போருக்கு புதிதாக ஆர்.சி.சி. கூரையுடன் கூடிய வீடுகளை கட்டித் தருவதே இந்த திட்டத்தின் நோக்கம்.
2024-25ம் நிதியாண்டில் ஒரு வீட்டுக்கு ரூ.3.10 லட்சம் என்ற அளவில், ஒரு லட்சம் வீடுகள் கட்ட அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு இன்று (ஜூன் 18) 3100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த திட்டத்துக்காக பயனாளர்களை தேர்வு செய்யும் பணியை வரும் 25ஆம் தேதிக்குள் முடிக்கவும் இப்பட்டியலை வரும் 30ஆம் தேதி நடக்கும் கிராம சபைக் கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெற வேண்டும் என்றும் ஊரக வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளது.
தொடர்ந்து ஜூலை 10ம் தேதிக்குள் வீடு கட்டும் பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
இந்த திட்டத்தில் கட்டப்படும் வீடுகள் 300 சதுர அடி RCC கூரை வேயப்பட்டிருக்க வேண்டும். மீதமுள்ள 60 சதுர அடி பகுதி பயனாளிகளின் விருப்பப்படி RCC அல்லது எரியாத பொருள் கொண்ட மற்ற வகை கூரையாக இருக்க வேண்டும்.
ஓலைகள் (Thatches) மற்றும் கல்நார் தாள் (Asbestos sheet) கொண்ட கூரை எந்த சூழ்நிலையிலும் வேயப்படக்கூடாது.
வீட்டுச் சுவர்கள், நாட்டுச் செங்கற்கள் (Country Bricks), சாம்பல் செங்கற்கள் (Fly Ash bricks), திட பிளாக்குகள்(Solid Blocks), இன்டர்லாக் பிளாக்குகள் (Interlocking).
ஏசிசி பிளாக்குகள் (ACC blocks) ஆகியவை மற்றும் சிமெண்ட் கலவை பயன்படுத்தி கட்ட வேண்டும். எக்காரணத்தை கொண்டும் மண் கலவை பயன்படுத்தக் கூடாது.
மண்சுவர் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
‘ரசவாதி’ ஓடிடி ரிலீஸ் எப்போது?