காரிலேயே அலைந்த காக்காத் தோப்பு பாலாஜி… அதிகாலை என்கவுன்ட்டர் யாருக்காக?

தமிழகம்

சென்னையில் இரு மாத இடைவெளியில் மீண்டும் ஒரு போலீஸ் என்கவுன்ட்டர் நடந்திருக்கிறது.

கடந்த ஜூலை 14 ஆம் தேதி  ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். இந்த நிலையில் செப்டம்பர் 18 ஆம் தேதி காலை வடசென்னை பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி காக்காத் தோப்பு பாலாஜி, போலீஸுடனான என்கவுன்ட்டரில்  கொல்லப்பட்டுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சம்பவ  செந்திலின் நேரடி எதிரியாக  காக்காத் தோப்பு பாலாஜி கருதப்படுவதால் இந்த என்கவுன்ட்டர் மேலும் சர்ச்சையாகியிருக்கிறது.

யார் இந்த காக்காத் தோப்பு பாலாஜி, எப்படி நடந்தது இந்த என்கவுன்ட்டர்?

சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு எதிரே அமைந்திருக்கும் குடியிருப்புப்  பகுதிதான் காக்காத் தோப்பு. விளிம்பு நிலை மக்கள் பெருமளவில் வசித்து வரும் இப்பகுதியைச் சேர்ந்தவர்தான் பாலாஜி. இதே பகுதியில் அப்போது பெரும் செல்வாக்கோடு இருந்தவர் ரவுடி நாகேந்திரன்.

அவருடன் மெல்ல மெல்ல நெருக்கமானார் பாலாஜி. அப்போது ரவுடிகள் உலகில் வேறு சில பாலாஜிகள் இருந்ததால்  ஏரியாவின் பெயரைச் சேர்த்து காக்காத் தோப்பு பாலாஜி என்று அழைக்கப்பட்டார். சென்னை முத்தியால்பேட்டை காவல்நிலையத்துக்கு உட்பட்டதுதான் காக்காத் தோப்பு.  நாகேந்திரனைத் தொடர்ந்து பிரபல ரவுடி சி. டி.  மணியுடன் கை கோர்த்தார்.

ஒரு வழக்கில் காக்காத் தோப்பு பாலாஜியை  நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர் போலீஸார். அப்போது காக்காத் தோப்பு பாலாஜி நீதிமன்ற வளாகத்திலேயே, ‘வக்கீல் என்ற போர்வையில் சம்பவ செந்தில்னு ஒரு ரவுடி பல கொலைகளை செஞ்சிக்கிட்டிருக்கான். ஆனா அவனை போலீஸ் ஒண்ணும் பண்ணலை. சம்பவ செந்தில் பண்ற கொலைக்கெல்லாம் கல்வெட்டு ரவி  போய் சரண்டாயிடுறான். போலீஸே இதெல்லாம் உங்களுக்கு தெரியாதா?’ என்று சத்தமாக கத்தியிருக்கிறார் காக்காத் தோப்பு பாலாஜி.

இந்தத் தகவல் சம்பவ செந்திலுக்கும் உடனடியாக சென்றது. அன்று முதல் சம்பவ செந்திலுக்கும் காக்காத்  தோப்பு பாலாஜிக்கும் நேரடியாக பகை உருவானது.

இந்த சம்பவம் நடந்து இரண்டு வருடங்கள் கழித்து…  சி.டி. மணியும் காக்காத் தோப்பு பாலாஜியும் தேனாம்பேட்டை சாலையில் சென்றபோது இருவர் மீதும் வெடிகுண்டு வீசியது ஒரு கும்பல். வெடிகுண்டு வீசியது பிரபல ரவுடி சம்பவ செந்தில்தான் என்று போலீஸுக்குத் தெரிந்தும் இன்று வரை அந்த வழக்கில் சம்பவ செந்திலை போலீஸ் கைது செய்யவில்லை.

இதுமட்டுமல்ல… தன்னுடைய ஆளான கல்வெட்டு ரவிக்காக சென்னை கீழ்ப்பாக்கத்தில்  பிரச்சினையில் சிக்கிய ஒரு வீட்டை கைப்பற்ற முயன்றார் சம்பவ செந்தில். ஆனால், அதற்கு காக்காத் தோப்பு பாலாஜி நேரடியாக ஸ்பாட்டுக்கே சென்று எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் சம்பவ செந்திலுக்கும், காக்காத் தோப்பு பாலாஜிக்கும் இடையிலான மோட்டிவ் உஷ்ணம் கொதி நிலைக்குச் சென்றது.

அப்போதில் இருந்தே  காக்காத் தோப்பு பாலாஜியை போட்டுத் தள்ள சம்பவ செந்திலும்… அதற்கு முன் சம்பவ செந்திலை சம்பவம் செய்ய வேண்டும் என்று சி.டி.மணி, காக்காத் தோப்பு பாலாஜி கூட்டணியும் தீவிரமாக முயற்சித்து வந்தனர்.

இந்த சூழலில்தான் கடந்த ஜூன் மாதம் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் சம்பவ செந்தில் பெயரும் அடிபட்டு அவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

சம்பவ செந்தில் பொதுவாகவே எங்கேயும் நேரடியாக களமிறங்காமல் ரிமோட் மூலமாகவே செயல்பட்டு வந்த நிலையில்… காக்காத் தோப்பு பாலாஜி வடசென்னையின் துறைமுகம், லாரி ஷெட்டுகள் உள்ள்ளிட்ட பகுதிகளில் நேரடியாகவே கப்பம் வசூலித்த செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

சமீபத்தில்  வடசென்னையின்  முக்கியமான அரசியல் சக்தி ஒருவர் பாரிமுனையில் ஒரு இடப் பஞ்சாயத்தை முடிவுக்குக் கொண்டுவந்த நிலையில் காக்காத் தோப்பு பாலாஜி அதில் தலையிட்டிருக்கிறார். அதனால் அந்த அரசியல் சக்தியின் கோபமும் காக்காத் தோப்பு பாலாஜி மேல் விழுந்தததாக சொல்கிறார்கள்.

சென்னையில் பல ரவுடிகள் இப்போது தங்களுக்கென வீடு, சொகுசு ஹோட்டல் அறைகள் இருந்தாலும் வழக்கமான இடத்தில் தங்குவதில்லை. பலரும் காரிலேயேதான் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அப்படித்தான் காக்காத் தோப்பு பாலாஜியை கண்காணித்த போலீஸார் அவர் காரிலேயே சுற்றிக் கொண்டிருப்பதை உறுதி செய்தனர்.

இந்த நிலையில்….  இன்று (செப்டம்பர் 18)  அதிகாலை 3 மணியளவில் முத்தியால்பேட்டை காவல்நிலையம் எல்லைக்குட்பட்ட பழைய குடியிருப்பு பகுதியில் காரில் இருந்த காக்காத் தோப்பு பாலாஜியை நெருங்கியது ஒரு போலீஸ் டீம்.  பாலாஜிக்கு அறிமுகமான போலீஸாரும் அந்த டீமில் இருந்தனர்.

அவர்களைப் பார்த்த காக்காத் தோப்பு பாலாஜி,   ‘என்னாங்க… இந்த நேரத்துல?’ என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு போலீஸார், ‘ஒரு என்கொயரி போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் வந்துட்டுப் போ’ என்று கேட்டிருக்கிறார்கள்.

‘காலையில வர்றேனே…’ என்று காக்காத் தோப்பு பாலாஜி கேட்க, ‘இப்பவே காலைதான்… வா’ என்று அழைத்துப் போயிருக்கிறார்கள்.

அதன் பின் ஓரிருமணி நேரத்தில் வியாசர்பாடி போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட பகுதியில் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார் காக்காத் தோப்பு பாலாஜி.

காக்காத் தோப்பு பாலாஜி மீது 5 கொலை வழக்குகள், 17 கொலை முயற்சி வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

 

-வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அன்னபூர்ணா சம்பவம்… கே.கே.எஸ்.எஸ்.ஆர், அஜித்துக்கு நடந்தது என்ன? – கராத்தே தியாகராஜன் சொல்லும் ஃபிளாஷ்பேக்!

ஒரே நாடு ஒரே தேர்தல்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *