கிச்சன் கீர்த்தனா: கடலை மாவு தோசை வித் தக்காளி சட்னி

Published On:

| By Minnambalam Desk

மாத கடைசி, பொங்கல் செலவுகளால் கையிருப்பு குறைந்த நிலையில், வீக் எண்ட் ஸ்பெஷலாக என்ன செய்யலாம் என்று நினைப்பவர்களுக்கான பெஸ்ட் சாய்ஸ் இந்த  கடலை மாவு தோசை வித் தக்காளி சட்னி. 

என்ன தேவை?

கடலை மாவு – 50 கிராம்
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
கோதுமை மாவு – 50 கிராம்
இட்லிக்கு அரைத்த மாவு – 100 கிராம்
சின்ன வெங்காயம் – 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
சீரகம் – அரை டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழையைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கடலை மாவையும், கோதுமை மாவையும் சேர்த்து கட்டியில்லாமல் ஒன்றாகக் கரைத்துக் கொள்ளவும். இதனுடன் சீரகம், இட்லி மாவையும் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை, உப்பு போன்றவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து ஒரு குழிக்கரண்டி மாவெடுத்து கல்லில் தோசையாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் சேர்த்து இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். தொட்டுக் கொள்ள தக்காளி சட்னியுடன் பரிமாறவும்.

தோசைக்குத் தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி

என்ன தேவை?

பெங்களூர் தக்காளி – 3
பெரிய வெங்காயம் – ஒன்று
உப்பு – தேவையான அளவு
காய்ந்த மிளகாய் – 2
எண்ணெய் – 2 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும், பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம், காய்ந்த மிளகாயைச் சேர்த்து நன்கு வதக்கவும். இதில், தேவையான அளவு உப்பைச் சேர்த்து வதக்கவும். சூடு ஆறியதும், மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும். சுவையான தக்காளி சட்னி ரெடி.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share