வட இந்திய உணவுகளில் பனீர் பட்டர் மசாலா, பாவ் பஜ்ஜி, ஆலூ சமோசா, பானி பூரி, சன்னா மசாலா, பட்டர் நான், ஆலூ சப்ஜி வரிசையில் இந்த கடாய் சோயாவும் பிரபலமானது. நான், சப்பாத்தி, பரோட்டாவுக்கு சிறந்த சைடிஷான இதை நீங்களும் செய்து அசத்தலாம்.
என்ன தேவை?
சோயா துண்டுகள் – 100 கிராம்
பெரிய வெங்காயம் – ஒன்று
பெங்களூரு தக்காளி – ஒன்று
குட மிளகாய் – ஒன்று
உப்பு – ஒன்றரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
கெட்டித் தயிர் – 100 மில்லி
கஸுரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) – ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – 2 டீஸ்பூன்
மசாலாத்தூள் தயாரிக்க…
மல்லி (தனியா) – ஒன்றரை டீஸ்பூன்
சீரகம் – ஒன்றரை டீஸ்பூன்
மிளகு – அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
பட்டை – ஒரு துண்டு
கிராம்பு – 2
எப்படிச் செய்வது?
அடுப்பில் வெறும் வாணலியை வைத்து, எண்ணெய் இல்லாமல் மசாலாத்தூள் தயாரிக்கக் கொடுத்த பொருட்களைச் சேர்த்து, வாசம் வரும் வரை வறுத்து ஆற வைக்கவும். இதனை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
வெங்காயம், தக்காளி, குட மிளகாய் மூன்றையும் சிறிய சதுரத் துண்டுகளாக நறுக்கவும். சோயாவை 10 முதல் 15 நிமிடங்கள் வெந்நீரில் ஊறவைக்கவும். பிறகு நீரை வடித்துவிட்டு, குளிர்ந்த நீரில் அலசி, இரு கைகளால் நன்கு பிழிந்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
அடுப்பில் கடாய் அல்லது தோசைக் கல்லை வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிதமான தீயில் சோயாவை இட்டு பொன்னிறமாகும்வரை வறுத்துத் தனியாக வைக்கவும். அதே கடாயில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
இதில் தக்காளி, மஞ்சள்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு அல்லது மூன்று நிமிடம் வதக்கவும். இத்துடன் குடமிளகாய் சேர்த்து வதக்கி தயிர் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கவும்.
இத்துடன் வறுத்த சோயா, அரைத்து வைத்த மசாலாத்தூளையும் சேர்த்து நன்கு கிளறவும். இறுதியாக கஸுரி மேத்தி, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
கிச்சன் கீர்த்தனா: தக்காளி சாப்பிட்டால் கிட்னியில் கற்கள் வரும் என்பது உண்மையா?