கபடி போட்டியில் ஆடும்போதே இறந்துபோன கடலூரைச் சேர்ந்த வீரர் விமல்ராஜ் குடும்பத்துக்கு நடிகர் ஆர்.கே.சுரேஷ் ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர், பெரியபுறங்கணி முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விமல்ராஜ். கபடி அணி வீரரான இவர் சேலம் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி 2ம்ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், சேலத்தில் உள்ள கபடி அகாடமி ஒன்றில் கபடி பயிற்சி பெற்று வந்தார். ஜூலை 24ம் தேதி இரவு பண்ருட்டி அடுத்த மானடிகுப்பத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் இவர் கலந்துகொண்டு விளையாடினார்.
அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். கீழே விழுந்ததும் கீழகுப்பம் கிராம எதிர் அணியை சேர்ந்த வீரர் பிடிக்க முற்பட்டபோது இவரது மார்பில் அடிபட்டு சுயநினைவில்லாமல் கிடந்தார். உடனே அதிர்ச்சியடைந்த சக வீரர்கள் விமல்ராஜை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விமல்ராஜ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது, அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கபடி வீரர் விமல்ராஜ் இறந்ததற்கு ஆறுதல் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ஆகஸ்ட் 2ம் தேதி தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், கபடி வீரர் விமல்ராஜ் வீட்டுக்குச் சென்று அவருடைய பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். அத்துடன், முதலமைச்சர் அறிவித்த நிவாரண நிதி 3 லட்சத்திற்கான காசோலையையும் வழங்கினார். தன் சொந்த நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் காசோலையையும் வழங்கினார்.
இந்த நிலையில் உயிரிழந்த கபடி வீரரின் குடும்பத்தினரை, பண்ருட்டி சென்று இன்று (ஆகஸ்ட் 5) நேரில் சந்தித்த நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் அந்தக் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.
பத்திரிகை நண்பர்களிடம் இதுகுறித்துப் பேசிய ஆர்.கே. சுரேஷ், ‘இப்போது நான் நடித்து வருகிற படத்தில் வரும் காட்சியை போலவே விமல்ராஜ் இறப்பு நடந்துள்ளது. அதனால் நான் மனதளவில் ரொம்ப உடைந்துவிட்டேன். அவரது குடும்பத்தை சந்தித்து உதவி செய்ய வந்தேன். சிறந்த விளையாட்டு வீரரை இழந்துவிட்டோம். மதுரையில் நடைபெற இருக்கும் மாபெரும் கபடி போட்டியில் நான் விமல் ராஜை கௌரவிக்க நடவடிக்கை எடுப்பேன். இந்த குடும்பத்துக்கு நான் எந்த உதவி வேண்டுமானாலும் செய்வேன்” என்று நெகிழ்வாகக் கூறினார் ஆர்.கே. சுரேஷ்.
ஜெ.பிரகாஷ்
இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில் ஸ்டாலின்: திமுக கூட்டணியில் திருப்பு முனை!