ஆரணியில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் கரணம் அடிக்கும் போது மயங்கி விழுந்த கபடி வீரர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணிப் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார்(34). இவர் ஆரணி டவுன் களத்துமேட்டுத் தெருவில் மாரியம்மன் கோயிலுக்கு கூழ்வார்க்கும் திருவிழா கபடி போட்டிக்காக பங்கேற்க தயாராகி வந்தார். இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி நடைபெற்ற திருவிழா அன்று தனது கே.எம்.எஸ் கபடி குழுவினருடன் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அவர்களை சுற்றி பொதுமக்கள் சூழ்ந்த நிலையில், அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக வினோத்குமார் தொடர்ந்து கரணம் அடிக்க முயன்றார். ஆனால் இரண்டாவது தடவை கரணம் அடித்தவர், அப்படியே மயங்கிவிட்டார்.
உடனடியாக அவரை மீட்ட பொதுமக்கள் ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மேல் சிகிச்சைக்காக வேலூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கேயும் முன்னேற்றம் இல்லாததால் சென்னை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் வினோத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு திருமணமாகி சிவகாமி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
அவர் கரணம் அடிக்கும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலான நிலையில் இச்சம்பவம் வெளியே தெரியவந்துள்ளது. இதுவரை வினோத் குமாரின் இறப்பிற்கு என்ன காரணம் என தெரியவில்லை. எனினும், அவர் கரணம் அடிக்கும்போது ஏற்பட்ட தடுமாற்றத்தில் அவரது கழுத்து பகுதி எலும்பு இடப்பெயர்வு ஏற்பட்டிருக்கலாம் என்றும், கரணம் அடித்ததால் ஏற்பட்ட அதிக அழுத்தத்தால் ரத்தக் குழாய்கள் வெடித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன் கடலூரில் கபடி விளையாடிக் கொண்டிருந்தபோதே வீரர் விமல்ராஜ் மூச்சுத் திணறி உயிரிழந்தார். அந்த சோகமே இன்னும் மறையாத நிலையில் அடுத்த கபடி வீரரின் மறைவு சோகத்தை கூட்டியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா