அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்து 24 ஆண்டுகள் வழக்கறிஞராகவும், 11 ஆண்டுகள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றிய ஆர்.மகாதேவன் இன்று (ஜூலை 18) உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுள்ளார். அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
சரி… யார் இந்த மகாதேவன்? அவர் விசாரித்த முக்கியமான வழக்குகள் என்னென்ன என்பதை நாம் பார்க்கலாம்…
1963-ஆம் ஆண்டு ஜூன் 10-ஆம் தேதி சென்னை பழவந்தாங்கலில் ஆர்.மகாதேவன் பிறந்தார். நங்கநல்லூர் நேரு அரசினர் உயர்நிலைப்பள்ளியில் தமிழ்வழிப் பள்ளிப்படிப்பை முடித்தவர், சென்னை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார். 1989-ஆம் ஆண்டு சென்னை பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார்.
மகாதேவனின் தந்தை மா.அரங்கநாதன் தமிழ் இலக்கியத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட எழுத்தாளர். இதனால் தனது மகனுக்கு சிறு வயது முதலே இலக்கியங்களை படிக்கக் கொடுத்தார்.
1988 முதல் 1996 வரை ‘முன்றில்’ எனும் சிற்றிதழை மா.அரங்கநாதன் நடத்தி வந்தார். பொருளின் பொருள் கவிதை, பறளியாற்று மாந்தர் உள்ளிட்ட பல்வேறு நூல்களை அவர் எழுதியுள்ளார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி மா.அரங்கநாதன் காலமானார்.
தனது தந்தையின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அவரது நினைவு நாளின் போது அரங்கநாதன் இலக்கிய விருதுகளை மகாதேவன் வழங்கி விருதோடு, ஒரு லட்சம் ரொக்கம் பரிசுத் தொகையும் வழங்கி வருகிறார். தனது வாழ்வில் தந்தை ஏற்படுத்திய தாக்கத்துக்கான அடையாளமாக இதைச் செய்து வருகிறார் நீதிபதி மகாதேவன்.
சிவில், கிரிமினல், சுங்கம், மறைமுக வரிகள், உள்ளிட்ட வழக்குகளில் 24 ஆண்டுகளுக்கும் மேலாக நிபுணத்துவம் பெற்ற வழக்கறிஞராக சிறப்பாக பணியாற்றினார்.
மேலும், தமிழக அரசின் கூடுதல் அரசு ப்ளீடராகவும் ( வரித்துறை) பணியாற்றியுள்ளார். வழக்கறிஞராக இருந்த காலத்தில் 9,000-க்கும் மேற்பட்ட வழக்குகளுக்காக ஆஜராகி வாதாடியுள்ளார்.
பின்னர் 2013-ஆம் ஆண்டு அக்டோபர் 25-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
10 ஆண்டுகளாக நீதிபதியாக பணியாற்றிய மகாதேவன், 2024-ஆம் ஆண்டு மே 24-ஆம் தேதி பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்றார். தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக ப்ரோமோட் செய்யப்பட்டுள்ளார்.
ஆர்.மகாதேவனின் முக்கியமான தீர்ப்புகள்!
மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒடியா ஆகிய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியது செல்லாது என்று அறிவிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் காந்தி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.கே.கவுல், ஆர்.மகாதேவன் அமர்வு,
“இந்த மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கினால் தமிழ் மொழியின் முக்கியத்துவம் குறைந்துவிடாது. மாற்று மொழியின் வளர்ச்சியிலோ அல்லது வீழ்ச்சியிலோ வேறு ஒரு மொழியின் வளர்ச்சி இருக்காது. கலை, இலக்கியத்தின் பங்களிப்பின் அடிப்படையிலேயே ஒரு மொழியின் முக்கியத்துவம் இருக்கும். எனவே இந்த வழக்கில் நீதிமன்றம் தலையிடுவதற்கான காரணம் இல்லை” என்று வழக்கை முடித்து வைத்தார்கள்.
தமிழகத்தில் உள்ள கோவில் நிலங்களை பாதுகாப்பது தொடர்பாக கடந்த 2015-ஆம் ஆண்டு நீதிபதி ஆர்.மகாதேவன் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.
முழுமையாக ஐந்து ஆண்டுகள் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தொல்பொருள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அதிகாரிகள் பாதுகாக்க தவறிவிட்டனர் என்று வருத்தம் தெரிவித்தார்.
மேலும், “கோவில் நிலங்களை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்க வேண்டும். அர்ச்சகர்கள், ஓதுவார்கள், கோவில் ஊழியர்களுக்கு முறையான சம்பளத்தை நிர்ணயம் செய்ய வேண்டும், கோவில்களில் அறங்காவலர்களை நியமிக்க வேண்டும். கோவில் நிலங்கள் தொடர்பாக பிரச்சனைகளை தீர்க்க ஒரு தீர்ப்பாயத்தை அமைக்க வேண்டும்” என்பது உள்ளிட்ட உடனடியாக செயல்படுத்த வேண்டிய 75 உத்தரவுகளை பிறப்பித்தார்.
தமிழகத்தில் புராதன மற்றும் பழமையான கோவில்களில் உள்ள சிலைகள் கடத்தப்பட்டது தொடர்பான வழக்கை நீதிபதி மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு அமர்வு விசாரித்தது.
இந்த வழக்கின் போது, “சிலை கடத்தலில் அதிகாரிகள் யார் ஈடுபட்டிருந்தாலும், அவர்களை நீதிமன்றம் தப்பிக்க விடாது. தமிழக மண் உலகத்திற்கே ஞானபீடமாக விளங்குகிறது. தொன்மையான சிலைகளை கடத்த அனுமதிக்க மாட்டோம்” என்று கடுமை காட்டினார். வெளிநாடுகளில் இருந்து பல்வேறு சிலைகள் மீட்கப்பட்டதற்கு இந்த வழக்கு முக்கியவத்தும் வாய்ந்ததாக இருந்தது.
கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி பிறந்தநாள் அன்று ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி இளந்திரையன், ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை உள் அரங்கிலோ அல்லது நான்கு சுவர்களுக்குள்ளோ நடத்த அனுமதி வழங்கினார். இதை ஏற்க மறுத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து யார் மனதையும் புண்படுத்தக்கூடாது, வன்முறையை தூண்டும் வகையில் கோஷங்களை ஏற்படுத்தக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை சாலையில் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நன்னெறி போதிக்கும் வகையில், ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு பாடப்புத்தங்களில் திருக்குறளை சேர்க்க உத்தரவிட்டது உள்பட 11 ஆண்டுகளில் முக்கியமான உத்தரவுகளையும் 96,000-க்கும் மேற்பட்ட வழக்குகளையும் முடித்துவைத்துள்ளார் நீதிபதி ஆர்.மகாதேவன்.
“நான் நீதிபதியாக இருந்த காலத்தில் ஓர் ஆண்டே அனுபவம் பெற்ற இளம் வழக்குரைஞராக இருந்தாலும், மூத்த வழக்கறிஞராக இருந்தாலும் ஒரே மாதிரியாகத் தான் பார்த்தேன். நீதிபதி பதவியை, பதவி என பார்க்காமல் எனக்கு வழங்கப்பட்ட பணி என பார்த்தேன்” என்று சென்னையில் நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் எமோஷனலாக பேசியிருக்கிறார் மகாதேவன்.
வழக்கறிஞர், நீதிபதி என்ற முகங்களை தாண்டி தமிழ், இலக்கியம், பண்பாடு, கலாச்சாரம் மீது மிகுந்த ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவராக அறியப்படும் நீதிபதி ஆர்.மகாதேவன் சென்னை உயர்நீதிமன்றத்தைப் போலவே உச்சநீதிமன்றத்திலும் பல வழக்குகளுக்கு தீர்வு காண்பார் என்ற எதிர்பார்ப்பு வழக்கறிஞர்கள் மத்தியில் உள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கன்னடர்களுக்கே வேலைவாய்ப்பு மசோதா நடைமுறையாவது சாத்தியமா? தமிழ்நாட்டின் நடைமுறை என்ன?
நீட் முடிவுகளை மையம் வாரியாக வெளியிட உத்தரவு : உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைது: தமாகாவில் இருந்து ஹரிகரன் நீக்கம்!
உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆர்.மகாதேவன் பதவியேற்பு!