சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி எம்.துரைசாமி நியமிக்கப்பட்டிருக்கிறார். தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் முனீஸ்வர் பண்டாரி வரும் செப்டம்பர் 12 ஆம் தேதியோடு ஓய்வுபெறுகிறார். இதையொட்டி இந்த நியமன அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இதுகுறித்து மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் இன்று (செப்டம்பர் 5) வெளியிட்டுள்ள செய்தியில்,
“அரசியல் அமைப்பு சட்டப் பிரிவு 223 இன்படி குடியரசுத் தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மிக மூத்த நீதிபதியான எம்.துரைசாமியை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி ஓய்வு பெறுவதால் வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் அலுவலகப் பொறுப்புகளை நீதிபதி துரைசாமி மேற்கொள்வார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடிதம் முறைப்படி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம், உயர் நீதிமன்றப் பதிவாளர் மூலமாக நீதிபதி துரைசாமி அலுவலகம், ஆளுநர் அலுவலகம், முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
–வேந்தன்