குற்றவியல் சட்டத்தினை அமலாக்கத்துறையும் பின்பற்ற வேண்டுமென நீதிபதி நிஷா பானு தீர்ப்பின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார் என்று வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில்பாலாஜியை ஜூன் 14 ஆம் தேதி அமலாக்கத்துறை பி.எம்.எல்.ஏ. சட்டத்தின்படி கைது செய்த நிலையில், அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அவரது மனைவி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதன் மீதான தீர்ப்பு இன்று (ஜூலை 4) உயர் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட நிலையில், நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி இருவரும் இருவேறு தீர்ப்பளித்தனர். இதனால் வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு செல்கிறது.
தீர்ப்புக்குப் பின் செந்தில்பாலாஜி மனைவி தரப்பு வழக்கறிஞரான சரவணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”இந்த வழக்கு விசாரணையில் அமலாக்கத்துறை வைத்த முக்கிய வாதம், ‘குற்றவியல் நடைமுறை சட்டம் எங்களுக்கு பொருந்தாது’ என்பதுதான். ஆனால் அதை நீதிபதி நிஷா பானு ஏற்கவில்லை.
இந்தியாவில் ஒருவரை கைது செய்ய வேண்டுமானால் முதலில் 41ஏ நோட்டீஸை கொடுத்து விசாரணைக்கு அழைக்க வேண்டும். அவர் ஒத்துழைக்க மறுத்தால் மட்டுமே கைது செய்ய முடியும். இதுதான் சட்டம்.
ஆனால் அமலாக்கத்துறை தரப்பில் இந்த குற்றவியல் சட்டம் தங்களுக்கு பொருந்தாது என்று தெரிவித்தனர். ஆனால், தனியாக சட்டம் இருந்தாலும், குற்றவியல் சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்று அமலாக்கத்துறைக்கு தனது தீர்ப்பின் மூலம் குட்டு வைத்துள்ளார் நீதிபதி நிஷா பானு.
அவரின் தீர்ப்பு அமலாக்கத்துறைக்கு ஒரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. எனினும் தலைமை நீதிபதியின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த வழக்கின் அடுத்தக்கட்டம் இருக்கும்” என்று வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
செந்தில் பாலாஜி வழக்கில் இரு மாறுபட்ட தீர்ப்பு!