வேங்கைவயல்… நீதிமன்றம் மூலம் அரசியல் செய்ய அனுமதிக்க முடியாது : நீதிபதி காட்டம்!

Published On:

| By christopher

judge angry on vengaivayal case

வேங்கைவயல் விவகாரத்தில் நீதிமன்றம் மூலம் அரசியல் செய்வதை அனுமதிக்க இயலாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி காட்டமாக தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் தொடர் விசாரணை நடத்தி புதுக்கோட்டை நீதிமன்றத்தில் சமீபத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

இந்த சம்பவத்தில் மூன்று நபர்கள் அதில் தொடர்புடையவர்கள் என குறிப்பிடப்பட்டதோடு அவர்கள் தொடர்பான வீடியோக்கள் மற்றும் ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட எங்களில் மூன்று பேரையே குற்றவாளியாக்குவதா?’ என்று வேங்கைவயலைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சியினரும் குற்றப்பத்திரிகைக்கு கண்டனம் தெரிவித்து, வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே திருமங்கலத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், ’வேங்கை வயல் சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய உடனடி நடவடிக்கை வேண்டும். நீதிகேட்டு வேங்கைவயல் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

வீடியோ, ஆடியோக்கள் உண்மை!

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, ‘வேங்கை வயல் விவகாரம் குறித்த முழுமையான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேங்கை வயலில் சாதிய மோதலோ அரசியல் காழ்புணர்ச்சியோ கிடையாது. இருவருக்கு ஏற்பட்ட தனிமனித பிரச்சனை.

இரண்டு வருடங்களாக சிபிசிஐடி போலீசார் புலன் விசாரணை செய்து, அறிவியல் பூர்வமான சோதனைக்கு பின்னரே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இது தொடர்பாக வெளியான வீடியோ, ஆடியோக்கள் உண்மை. இதில் மூன்று நபர்கள் குற்றவாளிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளனர்” என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை புதன்கிழமை (ஜனவரி 29) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிமன்றம் மூலம் அரசியல் செய்வதா?

அதன்படி இன்று நடைபெற்ற விசாரணையின் போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “வேங்கைவயல் விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வலியுறுத்தி, அமைதியான வழியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும்” என வாதிட்டார்.

இதற்கு நீதிபதி நிர்மல்குமார், “உங்களுடைய அரசியலுக்கும், விளம்பரத்திற்கும் நீதிமன்றத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்த வேண்டாம். கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று அறிவியல்பூர்வமான ஆய்வுகளின் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதற்கு பிறகு எதன் அடிப்படையில் நீங்கள் ஆர்ப்பாட்டம் நடத்த கோருகிறீர்கள்? குற்றப்பத்திரிகை மீது உங்களுக்கு ஏற்பு இல்லை எனில், உரிய நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள். வேங்கைவயல் விவகாரத்தில் நீதிமன்றம் மூலம் அரசியல் செய்வதை அனுமதிக்க இயலாது” என தெரிவித்தார்.

தொடர்ந்து தீர்ப்புக்காக வழக்கை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share