அந்திமழை இதழின் நிறுவனர் ந.இளங்கோவன் இன்று (ஜூலை 28) அதிகாலையில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒரு நடுத்தர குடும்பத்தில் 1969-ஆம் ஆண்டு டிசம்பர் 7-ஆம் தேதி பிறந்த இளங்கோவன், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் இளநிலை கால்நடை மருத்துவப் பட்டப்படிப்பு முடித்தார். கல்லூரியில் படிக்கும் போது, இதழியல் பணி அல்லது தொழிலதிபர் ஆவது என இரண்டு விருப்பங்களை கொண்டிருந்தார்.
இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும்போது இதழியல் மீதான ஆர்வம் காரணமாக அந்திமழை என்ற கையெழுத்துப் பிரதியை தொடங்கினார். இந்த இதழ் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
1994ஆம் ஆண்டு பட்டப்படிப்பு முடித்தார் இளங்கோவன். இதழியல் பணிக்குச் செல்ல விரும்பியவர், குடும்பத்தினர் கருத்துக்கேற்ப யூனிகெம் லேபரேட்டரீஸ் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவில் வேலைக்குச் சேர்ந்தார்.
பின்னர் நாமக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட செல்வம் பிராய்லர்ஸ் நிறுவனத்தில் கர்நாடக மாநிலத்திற்குப் பொறுப்பாளராகச் சேர்ந்தார். 1996-ஆம் ஆண்டு ஃபோர்ட் டோட்ஜ் என்ற கால்நடை உயிரியியல் நிறுவனத்தில் விற்பனை மற்றும் தொழில்நுட்ப வணிகப் பிரிவில் பணியாற்றினார்.
இந்தகாலகட்டத்தில் குமுதம், தமிழன் எக்ஸ்பிரஸ், குங்குமம் போன்ற முன்னணி இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்த இளங்கோவன், இதழியல் மீதான தனது ஆர்வத்தை தொடர்ந்து மெருகூட்டிக்கொண்டே வந்தார்.
ஒருகட்டத்தில் இயந்திர வாழ்க்கையில் இருந்து விலகி, 1999-ஆம் ஆண்டு விண்நாயகன் என்ற மாதம் இருமுறை இதழில் முழுநேர இதழாளராகப் பணியில் சேர்ந்தார். அங்கு இவருக்கு முந்தைய சம்பளத்தில் 25 சதவிகிதம் மட்டுமே கிடைத்தது.
ஓர் ஆண்டு காலத்துக்குள் விண்நாயகன் இதழ் மூடப்படும் நிலையில் இருந்ததால், அதிலிருந்து விலகினார். பெங்களூருவுக்குத் திரும்பிவந்தவர், மீண்டும் கால்நடைகள் தொடர்பான ஒரு தொழில் நிறுவனத்தில் சேர்ந்தார்.
தொடர்ந்து 2007-ஆம் ஆண்டு இளங்கோவன் ஐரிஸ் சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை 16 லட்சம் ரூபாய் முதலீட்டில் தொடங்கினார். இந்த நிறுவனத்தில், நாய்களுக்கான அழகுசாதனப் பொருட்கள், ஷாம்பு வகைகள், பிஸ்கட் வகைகள் ஆகியவற்றைச் சந்தைப்படுத்தினார். பின்னர் 2008-ஆம் ஆண்டு தன் நண்பரின் ஹெல்த்கேர் என்ற நிறுவனத்தை கையகப்படுத்தி கோழிப் பண்ணைகளுக்கான இணை உணவுப் பொருட்களை சந்தைப்படுத்தினார்.
தனது வாழ்க்கையில் தான் சந்தித்த பல்வேறு பிரச்சனைகள் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய இளங்கோவன், “வெற்றிகரமான வேலையில் இருந்து விலகியது தவறான முடிவோ என்று பலமுறை வருந்தியிருக்கிறேன். அது போன்ற தருணங்களில், வெற்றிபெற்ற நபர்கள், தொழில் முனைவோர்களின் வாழ்க்கை வரலாற்றை நான் படிப்பேன்.
அதன்மூலம் எனக்கு நானே உந்துதல் பெற்றேன். மானுடத்துக்கு கூடுதல் மதிப்பு தர வேண்டும் என்பதை நான் விரும்புகிறேன். என்னுடைய நிறுவனங்களின் வெற்றிக்கு என்னுடைய பணியாளர் குழு, வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் காரணம்,” என்கிறார்.
தனது இறுதி மூச்சு வரை இதழியலின் மீது தீராத காதல் கொண்ட இளங்கோவனின் இழப்பு பத்திரிகை துறைக்கு பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “அந்திமழை இதழின் நிறுவன ஆசிரியரும் பதிப்பாளருமான இளங்கோவன் இன்று காலையில் நம்மை விட்டு பிரிந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.
மிகச்சிறந்த இலக்கியப் பணியை ஆற்றிச் சென்றிருக்கும் அவரின் பிரிவு அச்சு ஊடகத்திற்கு பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர்களுக்கும் உறவினர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எடப்பாடி, வேலுமணி மகன்களுக்கு புதிய பொறுப்பு? அதிமுகவில் சலசலப்பு!
அரசியலுக்கு நான் ரெடி… விஜய்க்கு ரூட் விட்ட அமீர்